பரமக்குடி; பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில் பொதுமக்கள் செல்ல தடையால் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து, வழிபாட்டு தலங்களில் பொது மக்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக தோச நிவர்த்தி அளிக்கும், நாகநாதசுவாமி கோயிலில் நித்திய பூஜைகள் மட்டும் நடக்கிறது. இக்கோயிலில் வருடம் முழுவதும் திருமண தடை நீங்க, குழந்தை வரம் வேண்டி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டுதல்களை பக்தர்கள் வைப்பர். மேலும் கோயில் எதிரில் உள்ள வாசுகி தீர்த்த குளத்தில் நீராடி செல்வர். தொடர்ந்து கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு கோயில் பூட்டப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை நம்பியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேங்காய், பழம், உணவு, பிளாஸ்டிக் பொம்மைகள் விற்பனை செய்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டைப் போன்று, இந்த வருடமும் வைகாசி வசந்த உற்சவ விழா ரத்து செய்யப்பட உள்ளதாக கோயில் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாமல் உள்ளதுடன், வியாபாரிகளும் வருமானத்திற்கு வழியின்றி சிரமம் அடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.