பதிவு செய்த நாள்
30
ஏப்
2021
04:04
மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு, இன்று பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.
கொரோனா தொற்று பரவுதலை குறைக்க, கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் ஆகிய வழிபாட்டு ஸ்தலங்களை அடைக்கும்படி, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வழிபாட்டு ஸ்தலங்களில், வழிபாடுகளை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் பக்தர்கள் யாரையும், அனுமதிக்கக் கூடாது எனவும், அரசு அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள, அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகும். செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், இக்கோவிலுக்கு வந்து செல்வர். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் யாரும் கோவிலின் உள்ளே வராத வகையில், அனைத்து கேட்டுகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள், கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் நுழைவாயில் கேட்டிற்கு, மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். கோவில் திறந்திருந்தாள் எவ்வாறு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்களோ, அதேபோன்று கோவிலின் நுழைவு கேட் முன்பாக, நேர்த்திக் கடனையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றி, அம்மன் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.