திருப்புத்துாரில் கோயில் விழாக்கள் ரத்து: பக்தர்கள் வருத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2021 06:04
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவும், திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழாவும் ரத்தாகி விட்டது பக்தர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
பூமாயி அம்மன் கோயிலில் சித்திரை தேய்பிறை பஞ்சமியில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெறும். அதன்படி இன்று அதிகாலை அம்மனுக்கு அபிசேகம் நடந்து, பக்தர்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்து அம்மனை வழிபடுவார்கள். மறுநாள் அதிகாலையில் பூச்சொரிதல் அபிசேகத்துடன் விழா நிறைவடையும். தொடர்ந்து வசந்தப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று தடைக்கான ஊரடங்கால் பூத்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டும் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்துள்ளதால் விழா ரத்தாகி விட்டது. இதே போன்று திருத்தளிநாதர் கோயிலில் நடைபெறும் பத்து நாள் உற்ஸவமான வைகாசி விசாகத்திருவிழாவும் ரத்தாகி விட்டது. இந்த உற்சவத்தில் தினசரி சுவாமி வீதி உலா,தேர், தெப்பம் நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக 2 விழாக்களும் நடைபெறாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.