பதிவு செய்த நாள்
01
மே
2021
04:05
மேட்டுப்பாளையம்; வழிபாட்டுத்தலங்களில், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், அவை மூடப்பட்டுள்ளன. எனினும், வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள், நுழைவாயிலில் நின்று நேர்த்திக் கடன் செலுத்திச் செல்கின்றனர்.கொரோனா தொற்று பரவலை குறைக்க, அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்து, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், வார நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், வந்து செல்வர்.தொற்று பரவலைத் தவிர்க்க, அரசு உத்தரவின்பேரில், கோவிலின் அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளன.நேற்று வெள்ளிக்கிழமை என்பதால், ஏராளமான பக்தர்கள், கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தனர். அவர்கள், நுழைவாயில் கதவுக்கு, மாலை அணிவித்து, சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.