சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிவகங்கை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் பல நூறாண்டு பழமையானது. இக்கோயிலில் வைகாசித் திருவிழாவும் அதையொட்டி நடக்கும் தேர் திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் முன்பாக உள்ள தெப்பக்குளம் பராமரிப்பில்லாமல் காணப்படுவதுடன் குப்பை கிடங்காக மாறி, தண்ணீர் அசுத்தமாகி கிடக்கிறது. இந்த அய்யனாரை குலதெய்வமாக கொண்டவர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிலையில் விசேஷ நாட்களிலும், வார நாட்களிலும் இங்கு பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவது வழக்கம். முடி காணிக்கை செலுத்தியவர்கள் குளிப்பதற்கு கோயில் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் தெப்பக்குளத்தின் தண்ணீரில் குளித்த பிறகுதான் தொட்டியில் குளிக்கிறார்கள். ஆனால் பலர் குளத்தில் குப்பைகளை கொட்டுவதுடன், கால்நடைகளையும் குளிப்பாட்டுகின்றனர். இதனால் ஒரு காலத்தில் பக்தர்கள் நீராடி வழிபட்ட இக்குளம் தற்போது பராமரிப்பில்லாமல் மாசுபட்டுள்ளது. எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து, நான்கு புறமும் படித்துறை வசதிகளை ஏற்படுத்தி, தெப்பக்குளத்தின் புனிதத்தன்மை குறையாமல் பாதுகாக்க கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.