பதிவு செய்த நாள்
12
மே
2021
04:05
கொரோனா தொற்றை புரிந்து கொள்ள, ராமாயணத்தில் ஒன்பது விஷயங்கள் இருக்கின்றன. ராமன், 14 ஆண்டுகள் காட்டுக்கு சென்றான். அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை; மகிழ்ச்சியாகவே காட்டு வாசத்தை ஏற்றான்.
அதுபோல, கொரோனாவை வெல்ல, நாம் காட்டு வாசம் எல்லாம் செய்ய வேண்டாம். சில மாதங்கள் வீட்டு வாசம் செய்து, அதிகமாக வெளியில் போகாமல் இருந்தாலே போதும்.
வதந்தி
அயோத்திக்கு வெளியில் இருக்கும் நந்திகிராமில், ராமனின் பாதுகைகளை எழுந்தருளச் செய்து, அயோத்தியை நன்கு கவனித்துக் கொண்டான் பரதன். அது போல, வீட்டில் இருந்தபடியே, நாமும் நம் பணிகளை சிறப்பாகச் செய்யலாம்.
கூனி சொன்ன வதந்தி களை கைகேயி நம்பி, ராமனையே காட்டுக்கு அனுப்ப துணிந்தாள். இந்த கொரோனா தொற்றின் போது, வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் நிறைய வதந்திகள் வரும். அவற்றை நம்பாமல், அரசும், டாக்டர்களும் என்ன சொல்கின்றனரோ, அதை மட்டும் நம்ப வேண்டும்.
காட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லாத போதும், லட்சுமணன் காட்டுக்கு சென்று, ராமனுக்கும், சீதைக்கும் கைங்கர்யம் செய்தான். அதுபோல இந்த சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் என்று முதல் நிலை பணியாளர்கள், வெளியில் வந்து மக்கள் பணி செய்கின்றனர்.
லட்சுமணனை பாராட்டுவது போல, இவர்கள் செய்யும் சேவையையும் பாராட்ட வேண்டும். இலங்கையில், 10 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த சீதை, நிச்சயம் ராமன் வந்து தன்னை காப்பான் என்று நம்பிக்கையுடன் இருந்தாள்; எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்கவில்லை.
நாமும் இந்த வைரசை வெல்வோம் என்று நம்ப வேண்டும். அதே நேரத்தில், அடிக்கடி கை கழுவுவது, சமூக இடைவெளி, முக கவசம் அணிவது; இந்த மூன்றும், வைரசை தடுக்கும் தர கட்டுப்பாட்டு விதிகள். இதை அவசியம் பின்பற்ற வேண்டும்.
இலங்கைக்கு சென்ற அனுமன், போகும் வழியிலும், அங்கு சென்ற பின்னும், சூழலுக்கு ஏற்ப தன்னுடைய வழிமுறைகளை மாற்றிக் கொண்டார்.
தியாகம்
அதனால் தான், அவரால் வெற்றி பெற முடிந்தது. அதுபோன்று, இந்த கொரோனாவை எதிர்த்து, நம்முடைய நிலைப்பாட்டை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். இது புது வைரஸ். எனவே, பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல் இவற்றில் அவ்வப்போது திருத்தம் செய்தால், வெற்றி பெற முடியும்.
லட்சுமணனை காட்டுக்கு அனுப்பியது ஊர்மிளையின் தியாகம். வெளியில் செல்லவே அச்சப்படும் நிலையில், முன்னிலை களப் பணியாளர்களை, அவர்களின் குடும்பத்தினர் போருக்கு அனுப்புவதை போன்று அனுப்புகின்றனர். பணி முடிந்து வீட்டுக்கு வந்தாலும், அவர்களால் இயல்பாக இருக்க முடியாது; தனி அறை, பாத்ரூம் என்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தியாகத்தை அனைவரும் உணர வேண்டும்.
எல்லா செல்வமும் இருந்தும், இன்னும் வேண்டும் என்ற பேராசையால், ராவணன் அழிந்து போனான். அதுபோல, இக்கட்டான இந்த நேரத்தில், பலரும் தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி பதுக்குவது போன்ற அவசியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
விபீஷணனை சுற்றிலும் ராவணன், சூர்ப்பனகை, கும்பகர்ணன் என்று, எத்தனை தீயவர்கள் இருந்தாலும், யாரையும் பொருட்படுத்தாமல், ராமனிடம் சரணாகதி அடைந்து, வெற்றி பெற்றதை போல, நம்மை சுற்றிலும் நிறைய எதிர்மறை உணர்வுகள் உள்ளன. அதைப் பற்றி கவலைப்படாமல், இறைவனிடம் சரணாகதி செய்து, நம்பிக்கையுடன் இருந்தால், கொரோனாவை வெல்ல முடியும்.
திருக்குடந்தை டாக்டர் உ.வே.வேங்கடேஷ்
அரசு மருத்துவ அலுவலர்,
கும்பகோணம்.
94882 07667
uppilimathur6@gmail.com