சென்னை: சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரிய வழக்கில் அறநிலையத் துறை அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனு:சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அறங்காவலர்கள் ஆக்கிரமிப்புகளை அனுமதித்துள்ளனர்.அறநிலையத்துறையின் ஒப்புதல் பெறாமல் இவர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அனுமதித்துள்ளனர்.
கோயிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.