பதிவு செய்த நாள்
13
மே
2021
06:05
பல்லடம்: நோய் தொற்றை விரட்ட எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கொள்ளுங்கள் என, காமாட்சிபுரி ஆதினம் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், சித்தம்பலம் நவகிரக கோட்டையின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக, நாடு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்கள் மாறியதே இதற்கு காரணம். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள், தானியங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள், மற்றும் கிராமங்கள் தோறும் சென்று, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மற்றும் முக கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.