பதிவு செய்த நாள்
14
மே
2021
10:05
உடுமலை:குடிமங்கலம் பகுதியில், பராமரிப்பில்லாமல், அழிந்து வரும், வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க, தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள கிராமங்கள், உப்பாறு படுகை என அழைக்கப்படுவதுடன், பல்வேறு வரலாற்று சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. கல்திட்டை, கல்வெட்டு, நடுகல், ஈமச்சின்னங்கள் என பல நுாற்றாண்டுகளுக்கு, முந்தைய, வரலாற்று சின்னங்கள், ஆய்வாளர்களின், மேற்பரப்பு ஆய்வில், இப்பகுதியில், கண்டறியப்பட்டுள்ளது. கொங்கல்நகரத்திலுள்ள உயரமான நடுகல், குடிமங்கலம் கல்வெட்டு, சோமவாரப்பட்டி கண்டியம்மன் கோவில் பகுதியில், கண்டறியப்பட்ட அணிகலன்கள், பானை ஓடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.இதே போல், அனைத்து கிராமங்களிலும், பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் உள்ளன.இவற்றில், மக்களின் வழிபாட்டிலுள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. வழிபாடு இல்லாத சிற்பங்கள், முறையாக பராமரிப்பின்றி, சிதிலமடைந்து, காணாமல் போய் வருகின்றன.குறிப்பாக, புலிக்குத்தி கல், கால்நடைகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க உயிர் நீத்த பெண்களுக்கு, அமைக்கும் நடுகற்கள், பராமரிப்பின்றி காணப்படுகின்றன.
கொண்டம்பட்டியில், திறந்தவெளியில், கால்நடைகளை மேய்க்கும் போது, வீரமரணம் அடைந்த பெண்ணுக்கு, பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே சிலை அமைத்துள்ளனர்; அருகிலேயே மற்றொரு வீரரின் சிலையும் உள்ளது. பெண்ணின் சிலை, கைக்குழந்தையுடனும், கீழ் பகுதியில், கால்நடைகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இருபுறங்களிலும் இருந்த பிற உருவங்கள் பராமரிப்பில்லாமல், சிதிலமடைந்துள்ளது. அருகிலுள்ள, வீரனின் சிலையில், மண்ணில், புதைந்து, கொண்டை, கை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல், ஆமந்தகடவில் இருந்த சிலை வரலாற்று ஆய்வாளர்களால், ஆய்வு செய்யப்பட்டது.இவ்வாறு, உப்பாறு படுகை கிராமங்களில், வழிபாடு இல்லாத பல்வேறு வரலாற்று சிற்பங்கள் அழிந்து வருகிறது; அவற்றை தொல்லியல் துறை மீட்டு, அருங்காட்சியகத்தில் வைக்க, வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.