பதிவு செய்த நாள்
17
மே
2021
05:05
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் மலை, கோடை மழையால் பசுமைக்கு திரும்பியுள்ளது.
சென்னிமலை மலை வனப்பகுதி, 1,400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மழையின்மை, வாட்டி வதைத்த கடும் வெயிலால், மரம், செடி, கொடிகள் வறண்டு, காய்ந்தன. இதனால் சென்னிமலை மலை கோவில் பகுதியும், வறண்ட பாலைவனம் போல் பாறைகளுடன் தென்பட்டன. கடந்த வாரத்தில் பெய்த மழையால், சென்னிமலை மலை வனப்பகுதி, கொஞ்சம் கொஞ்சமாக பசுமைக்கு திரும்பியது. மரம், செடி, கொடிகள் துளிர் விட்டு செழித்ததால், மீண்டும் பசுமைக்கு திரும்பியுள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது, பாறையாக தென்பட்ட மலை, தற்போது பச்சைப்போர்வை போர்த்தியது போல் காணப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்ல, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் முருக பக்தர்கள், ஏக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். காலையிலும், மாலையிலும் வீட்டு மொட்டை மாடியிலும், சாலையிலும் நின்று, மலையை மட்டுமே தரிசனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது மலை பசுமைக்கு திரும்பியுள்ளதால், முருக பெருமானையே தரிசனம் செய்தது போல் உள்ளதாக பரவசப்படுகின்றனர்.