சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிராம மக்கள் வேப்பிலையில் வேலி அமைத்து கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
பிரான்மலை ஊராட்சி மதகுபட்டியில் கொரோனா வராமல் தடுப்பதற்காக கிராமமக்கள் ஊருக்குள் வெளியாட்கள் வராதவாறு கயிறுகளில் வேப்பிலை கட்டி தொங்கவிட்டு பாதைகளை அடைத்துள்ளனர். அவசர, அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் சோப்பு போட்டு கை, கால்களை கழுவியபிறகே ஊருக்குள் நுழைகின்றனர். இதற்காக 24 மணி நேரமும் முகப்பில் ஒருவர் கண்காணிப்புக்கு நிறுத்தப்படுகிறார். அப்பகுதியை சேர்ந்த வைரவன் கூறியதாவது, எங்கள் கிராமத்தில் கொரோனாவை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக நாங்களே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இங்கு 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பூ வியாபாரம் செய்யும் நிலையில் யாரும் வெளியூர் சென்று பூ வியாபாரம் செய்து விட்டு ஊருக்கு வரக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளோம். மருத்துவமனை உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு வெளியில் சென்று வருவார்கள் ஊர் எல்லையில் சோப்பு போட்டு கைகளை கழுவிய பிறகுதான் உள்ளே வர வேண்டும், முகக்கவசம் இல்லாமல் யாரும் வீதிகளில் நடமாடக் கூடாது, ஒருவருக்கு ஒருவர் குறைந்தது 6 அடி இடைவெளி விட்டு நின்றுதான் பேசவேண்டும், தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது என்று எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு முன்னுதாரணமாக செயல்படுகிறோம். என்றார்.