பதிவு செய்த நாள்
22
மே
2021
05:05
அரூர்: அரூர் அருகே, கொரோனா தொற்றை தடுக்க வேண்டி காளியம்மன், மாரியம்மனுக்கு, 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.
கொரோனா அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த, 10 முதல் வரும், 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பதுடன், பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அக்ரஹாரம் பஞ்.,க்கு உட்பட்ட நெருப்பாண்டகுப்பத்தில், கொரோனாவை தடுக்க வேண்டி காளியம்மன், மாரியம்மனுக்கு, 101 குடம் தண்ணீர் ஊற்றி பெண்கள் வழிபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த காலங்களில் காலரா, மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவிய போது, எங்கள் ஊரில் உள்ள காளியம்மன், மாரியம்மனை வழிபட்டதால், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதே போல், கடந்தாண்டு வீசிய கொரோனா முதல் அலையில் எங்கள் கிராமத்தில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், பெண் ஒருவரின் கனவில் வந்த காளியம்மன், தனது சன்னிதானத்திற்கு, 101 குடம் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி அடைய செய்யும்படி கூறி மறைந்துள்ளார். இதையடுத்து, காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு, 101 குடம் தண்ணீரை ஊற்றி பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதன் மூலம் கிராமத்தில் யாருக்கும் கொரோனா தொற்று பரவாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.