பதிவு செய்த நாள்
26
மே
2021
07:05
தஞ்சாவூர், கும்பகோணத்தில் வீரசைவ பெரிய மடத்தில்,காஞ்சி மகா சுவாமிகளின் ஜெயந்தி உற்சவகத்தையொட்டி, பூசாரிகள்,ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்ட 300 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் ஞானஸூதா அறக்கட்டளை சார்பில், காஞ்சி மகா சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சி மகா சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, ஜெபம், வேத பாராயணம் நடந்தது. இதில் பக்தர்கள் இல்லாமல் 10 பேர் மட்டும் கலந்து கொண்டனர்.
இதில், கோவில் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், ஓதுவார்கள், நலிவுற்ற சமையல் கலைஞர்கள், ஆட்டோ டிரைவர்கள் என மொத்தம் 300 பேருக்கு தலா ரூபாய் 2, 500 ரூபாய் வீதம் கொரோனா நிவாரணத்தை மகாசுவாமிகள் ஜெயந்தி விழாக்குழு நிர்வாகிகள் பிரதீப்குமார், குருமூர்த்தி ஆகியோர் சிலருக்கு வழங்கி, கொரோனா தொற்று பரவாமல் ஊரடங்கு உள்ளதால், கூட்டத்தை தவிர்க்கும் வகையில், மீதமுள்ளவர்களுக்கு அவரவர் வங்கி கணக்கில் இத்தொகையை செலுத்தினர்.
ஸ்ரீசங்கர மடம்: கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி மகா சுவாமிகளின் விக்ரகத்திற்கு ஆராதனைகள் நடந்தது. இதையொட்டி, மகா அபிஷேகம் செய்து ஆவஹந்தி ஹோமம் நடந்தது. உலக நன்மைக்காகவும், கொரோனா தொற்று விரைவில் நிவர்த்தியாக வேண்டியும் வேத பண்டிட்கள் பாராயணம், ஜெபம் செய்தனர். இதில் பக்தர்கள் இல்லாமல் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர். மேலாளர்கள் சங்கரன், சுவாமிநாதன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.