விஜயதசமி; தினமலர் அரிச்சுவடி ஆரம்பம்.. அ எழுதி கல்வியில் அடியெடுத்து வைத்த குழந்தைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2025 09:10
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும், வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர், தங்கள் மழலைகளை பள்ளிகளில் சேர்ப்பதும் வழக்கம்.அந்த வரிசையில், தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி பல்வேறு கோவில்களில் நடத்தியது
விஜயதசமியை முன்னிட்டு தினமலர் சார்பில் கோவை ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் அனா ... ஆவன்னா ...அரிச்சுவடி குழந்தைகள் நெல்மணிகளில் மஞ்சள் கிழங்கால் முதன்முதலாக எழுதும் நிகழ்வு அக்ஷர அப்பியாசம் என்று சொல்லப்படும் நிகழ்வு நடந்தது.இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் மடியில் வைத்துக் கொண்டு நெல்மணிகளில் எழுத பழகி கொடுத்தனர்.இந்த நிகழ்வில் கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு தினமலர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் வசதியை கருத்தில் வைத்து, வடபழநி ஆண்டவர் கோவில், பள்ளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குழந்தைகளின் ஆள்காட்டி விரலை பிடித்து தாம்பூல தட்டில் நிரப்பியிருந்த அரிசியில் முதலில் ஓம் அடுத்து அ என எழுதவைத்தனர். பெற்றோர் கூறியதாவது.. இந்த நாளை மறக்க முடியாது. வாழ்வில் நல்லதொரு நிகழ்வை தந்த தினமலர் நாளிதழை வாழ்த்துகிறேன் என்றனர்.
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில், அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்று சிறப்பித்தனர்.