பதிவு செய்த நாள்
26
மே
2021
04:05
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள அருள்மிகு வீரபாண்டி மாரியம்மன் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தையொட்டி, சிறப்பு அலங்கார, அபிஷேக நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆண்டுதோறும், வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தன்று, இக்கோவிலில் பிரம்மாண்டமான முறையில் பண்டிகை நடப்பது வழக்கம். விழாவில், வீரபாண்டியை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனை வழிபடுவர். தற்போது, தொற்று காலம் என்பதால், தடுப்பு விதிமுறைகள் காரணமாக கோவிலுக்குள், பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தினசரி வழிபாடுகள் நடத்த மட்டுமே அரசு அனுமதித்து இருந்தது.
இன்று வீரபாண்டி மாரியம்மன், இவ்வுலகம் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், அம்மனுடைய ஒரு கையில் மூலிகைகள் அடங்கிய குடமும், மற்றொரு கையில் வேப்பிலையையும் ஏந்தி அருள்பாலித்தார். இன்று காலையிலிருந்து பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பின் மாரியம்மன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டுமே, பூஜைகளை நடத்தினர்.