நரிக்குடி அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கிய நால்வர் கைது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2021 06:05
நரிக்குடி: நரிக்குடி அருகே ஐம்பொன் சிலைகளை பதுக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நரிக்குடி வீரசோழன் அருகே கமுதி- திருச்சுழி ரோட்டில் அபிராமம் சந்திப்பில் எஸ்.ஐ., முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் சிறிய அம்மன் சிலை வைத்திருந்ததும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் பழனிச்சாமி மற்றும் கூழிப்பாண்டி என்பதும் தெரிந்தது. நரிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் விசாரித்ததில், தனது கூட்டாளியான நரிக்குடி மீனாக்குளத்தைச் சேர்ந்த பூசாரி சின்னையா வீட்டில் 3 ஐம்பொன் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில், நரிக்குடி போலீசார் சின்னையா வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தி அங்கு சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, விநாயகர் சிலை, பெரிய அம்மன் சிலையை மீட்டு, பூசாரி சின்னையா மற்றும் பழனிமுருகனை கைது செய்தனர். ஊரடங்கால் செலவுக்கு பணம் இல்லாததால் ஐம்பொன் சிலைகளை கடத்தி ஏதாவது ஒரு நகைக்கடையில் விற்கலாம் என முடிவு செய்திருந்தோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். வெளிநாடுகளுக்கு கடத்தி பல கோடிக்கு விற்பனை செய்யும் கும்பலா என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.