பதிவு செய்த நாள்
27
மே
2021
06:05
சென்னை: கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும், முளுபாகலி ஸ்ரீ பாதராஜ மடத்தின் இளைய பீடாதிபதியாக சுஜய நிதி தீர்த்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நம் நாட்டில், அத்வைதத்தை ஆதி சங்கரும், விசிஷ்டாத்வைதத்தை ராமானுஜரும், துவைதத்தை மத்வாச்சார்யாரும் ஸ்தாபித்தனர். ஹரி ஸர்வோத்தமன் வாயு ஜீவோத்தமன் என்ற மத்வ மத, துவைத சித்தாந்தம், தன்னிகரில்லா தனி சிறப்புடன் விளங்குகிறது.இதற்கு, ஸ்ரீமன் மத்வாச்சார்யார் ஜெயதீர்த்தர், ஸ்ரீ பாதராஜ தீர்த்தர், வியாசராஜ தீர்த்தர், வாதிராஜ தீர்த்தர், விஜயேந்திர தீர்த்தர், ராகவேந்திர தீர்த்தர் ஆகிய ஆறு யதிகள் தான் மிக முக்கியமான காரணம்.
இதில், மத்வ மதம் கண்டெடுத்த வைரம் ஸ்ரீ பாதராஜ தீர்த்தர். இவரது மடம், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தின் முளுபாகலில் இயங்கி வருகிறது.ஸ்ரீபாதராஜர், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வியாஸராஜரின் குரு ஆவார்.இவரது மடத்தின் இளைய பீடாதிபதியாக, ஸ்ரீ சுஜய நிதி தீர்த்தர், மே, 22ல் சன்யாசம் ஏற்றுக் கொண்டார்.அவருக்கு, ஸ்ரீபாதராஜர் மூல பிருந்தாவனம் முன், மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ கேசவ நிதி தீர்த்தர், வேதாந்த சாம்ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து, மடத்தின் இளைய பீடாதிபதியாக நியமனம் செய்தார். இந்நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் அரங்கேறியது.முளுபாகலி ஸ்ரீ பாதராஜ மடத்தின் இளைய பீடாதிபதியாக, சுஜய நிதி தீர்த்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீகேசவ நிதி தீர்த்தர் பட்டாபிஷேகம் செய்து, இளைய மடாதிபதியாக அறிவித்தார்.