அவள் ஓர் ஏழை மூதாட்டி. நாள்தோறும் மடத்திற்கு வருவாள். காஞ்சி மகாபெரியவரை கண்குளிர தரிசனம் செய்து விட்டு வீட்டிற்குப் போவாள். இப்படி வரும்போதெல்லாம் மடத்திற்கு வரும் பலரை பார்த்தாள். பல செல்வந்தர்கள் மகாபெரியவரை தரிசிப்பதற்காக வரிசையில் நின்றார்கள். பூ, பழம் போன்றவற்றைத் தட்டில் வைத்து காணிக்கையாகக் கொடுத்தார்கள். இன்னும் பலர் மடம் செய்யும் நற்பணிகளுக்கு நன்கொடை அளித்தனர். ஏழ்மை காரணமாக தன்னால் எதுவும் கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் மூதாட்டிக்கு எழுந்தது. ஒருநாள் தன் இயலாமை குறித்து வருத்தம் ஏற்படுவதாக அவள் மகாபெரியவரிடமே சொல்லி விட்டாள். அவள் நாள்தோறும் தன்னை தரிசிக்க வருவதைக் கவனித்துவந்த மகாபெரியவர் கனிவு பொங்கப் பார்த்தார். ‘‘யாரிடமும் நான் எதையும் கேட்பதில்லை. அவர்களாகக் கொண்டுவருகிறார்கள். அதை அப்படியே தர்ம செயல்களுக்கு திருப்பி விடுகிறேன். அவ்வளவு தான். அவர்களும் எனக்கு எது வேண்டும் என்றோ என் மனசுக்கு எது பிடிக்கும் என்றோ கேட்டுக் கொடுப்பதில்லை. மடத்தை நடத்த என்னவெல்லாம் தேவைப்படும் என்று அவர்களாக அனுமானித்து அதன்படி கொண்டுவருகிறார்கள். ஆனால் நீ ஒன்று செய்யேன். எனக்கு எது பிடிக்குமோ அதை நீ கொடுக்கலாமே.. உன்னால் கொடுக்க முடியக் கூடியதைத்தான் நான் கேட்பேன். உனக்குச் செலவு வைக்கமாட்டேன். கொடுப்பாயா...’’ எனக்கேட்டார். ‘‘என்னால் முடியக் கூடியது எதுவானாலும் கட்டாயம் கொடுப்பேன்’’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் மூதாட்டி. ‘‘மடத்தில் நாள்தோறும் ஏதாவது ஹோமம் விடாமல் நடந்து கொண்டே இருக்கிறது. ஹோமத்தில் போட நல்ல பசுஞ்சாணியில் செய்த வரட்டியைத் தான் பயன்படுத்த வேண்டும். மடத்தில் மாட்டுக் கொட்டிலில் நிறையப் பசு மாடுகள் இருக்கின்றன. பசுஞ்சாணத்திற்குப் பஞ்சமே இல்லை. ஆனால் அதை வரட்டியாகத் தட்டிக் காயவைத்துக் கொடுக்கத்தான் ஆள் இல்லை. நீ ஒரு கூடையில் அந்தச் சாணியை எடுத்துக் கொண்டு போய் வரட்டி தட்டிக் காயவைத்து எனக்குக் கொண்டுவந்து கொடேன். நீ தரும் வரட்டியை நான் மடத்தில் நடைபெறும் ஹோமத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். இது உன்னால் சுலபமாக முடியக் கூடியதுதானே..செய்கிறாயா..’’ என்றார். சொடக்கினால் லட்ச ரூபாய்க்குக் கூட வரட்டிகளைக் கொண்டு வந்து அடுக்க எத்தனையோ செல்வந்தர்கள் காத்திருக்கும்போது, அந்த ஏழை மூதாட்டியிடம் வரட்டி தட்டித் தரும்படிக் கேட்டார் மகாபெரியவர். சுவாமிகள் தன்மேல் செலுத்தும் அன்பையும் அவரது கருணையையும் நினைத்து அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘செய்கிறேன் சுவாமி. கட்டாயம் செய்கிறேன்!’’ என்று அந்தக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து செய்து நிம்மதி பெற்றாள்.