பதிவு செய்த நாள்
30
மே
2021
04:05
சென்னை:அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், கிராமக்கோவில் பூஜாரிகள், ஓதுவார் உட்பட, இறைபணியில் ஈடுபடுபவர்களுக்கு, கொரோனா ஊரடங்கு உதவித் தொகையாக, மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு வி.எச்.பி., கிராம கோவில் பூஜாரிகள் பேரவை சார்பில், எஸ்.வேதாந்தம், ஆர்ஆர்.கோபால்ஜி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் நிறுவனரும், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ். வேதாந்தம், தமிழ்நாடு வி.எச்.பி., மாநில தலைவரும், கிராம கோவில் பூஜாரிகள் பேரவை அறங்காவலருமான ஆர்ஆர். கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 36 ஆயிரத்து 488 கோவில்கள், 56 திருமடங்கள், திருமடத்துடன் இணைந்த 58 கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் துப்புரவுப் பணியாளர் வரை எல்லாருக்கும், கோவில் நிதியில் இருந்து தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது.ஆனால், இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்களாக இல்லாத, இறைவன் திருமேனியை தொட்டு பூஜை செய்யும் அர்ச்சகர்கள், குருக்கள், பட்டாச்சாரியார்கள், பூஜாரிகள், மேளம் வாசிப்பவர்கள், ஓதுவார், பிரபந்தம் வாசிப்பவர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், ஸ்ரீபாதம் தாங்குபவர்கள், பூக்கட்டுபவர்கள் போன்று கைங்கர்யம் செய்பவர்களுக்கு, மதிப்பூதியம் என்ற பெயரில் சொற்ப தொகை மட்டுமே மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் காணிக்கை மட்டுமே அர்ச்சகர்கள் உள்ளிட்டோரின் ஜீவாதாரமாக இருந்து வந்தது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் கோவில்களும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் வருகை இல்லை. ஆனால், அந்த கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், நித்திய பூஜைகளை செய்து வருகின்றனர். பக்தர்கள் வராததால், அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் வருமானம் இல்லாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிப்புக்குள்ளாகி உள்ளனர். மதிப்பூதியம் என்ற சொற்பத் தொகை பெற்றுக் கொண்டு கைங்கர்யம் செய்து வரும் மற்றவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு, மாதம் 6,000 ரூபாய் உதவித் தொகையும், மூன்று மாதங்களுக்கு மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்க, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
உதவித்தொகைஅதேபோல், தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் கோவில்களில், மதிப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானனோருக்கு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ள, நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமான 350 ரூபாய் என்ற கணக்கில், மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையும், மளிகைப் பொருள் தொகுப்பும் தமிழக அரசு வழங்க வேண்டும். பூஜாரிகளுக்கும் அதுதவிர, தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு கோவிலுக்கும் பூஜாரிகள் இருக்கின்றனர். அவர்கள் அந்தந்த கிராமக் கோவில்களையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஊரடங்கால் அவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.கிராமக் கோவில் பூஜாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்த பூஜாரிகளுக்கு, முந்தைய அரசு, கொரோனா ஊரடங்கு நேரத்தில் உதவித் தொகை வழங்கியது.அதேபோல் இப்போதும், மாதம் தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும். லட்சக்கணக்கான அர்ச்சகர்கள், பூஜாரிகள் உள்ளிட்டோர் குடும்பங்களின் வாழ்வாதார பிரச்னையை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.