பதிவு செய்த நாள்
30
மே
2021
04:05
புதுச்சேரி: அர்ச்சகர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என ஆதிசைவ சிவாச்சாரியார்கள் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பாக புதுச்சேரி மாநில அமைப்பு செயலாளர் டி. ராஜாசுவாமிநாத சிவாச்சாரியார் அளித்துள்ள மனு:இறைவழிபாடே நோய் அச்சம் தீர்க்கும். பேரிடர் காலத்தில் மக்கள் நோய் நீங்க வேண்டி கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். அர்ச்சகர்கள், பரிசாரகர்கள், ஓதுவார்கள், பூஜாரிகள், இசைவாத்திய கலைஞர்கள், பூ தொடுப்போர், மெய்காவலர்கள், விளக்கேற்றிகள், துாய்மை பணி பெண்கள் குடும்பங்களின் வறுமை நீக்கிட வேண்டுகிறோம். கர்நாடகத்தில் அர்ச்சகர்களின் குடும்பத்திற்கு மாதம் 6000 வீதம் மூன்று மாதம் வழங்கப்படுகிறது. அதுபோல் இங்கும் வழங்க வேண்டும். கோயில்களில் பக்தர்கள் வராததால் தளிகை அளவை குறைக்குமாறு வாய்மொழி உத்தரவிடுவதை தவிர்க்க வேண்டும்.துறை ரீதியாக கணக்கெடுத்து அர்ச்சகர்களை அமைப்புசாரா பணியாளர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும். அர்ச்சகர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும். கோயில் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கி, கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் சிகிச்சை செலவை அறநிலையத்துறை ஏற்க வேண்டும்.
நோய் தாக்கி உயிரிழக்கும் அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், வாரிசுகளுக்கு அரசு பணியும் வழங்க வேண்டும்.ஒரு அர்ச்சகர் பல கோயில்களுக்கு பணியாற்றுகிறார். அடுத்தடுத்த கோயில்களுக்கு செல்லும்போது அர்ச்சகர்களுக்கு காவல்துறை சோதனையிலிருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சிவசங்கர சர்மா, புதுச்சேரி மாநில தலைவர் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், மாநில செயலாளர் அர்த்தநாரி சிவாச்சாரியார், மாநில பொருளாளர் கீதாராம சிவாச்சாரியார் உள்ளிட்டோர் மனுவில் கையெழுத்திட்டுள்னர்.