பதிவு செய்த நாள்
02
ஜூன்
2021
05:06
தமிழக கோவில்களுக்கு சொந்தமான பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்கும் முயற்சிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டுள்ளது. இந்நடவடிக்கையினை வரவேற்றுள்ள ஆன்மிக அன்பர்கள், கோவில் சொத்துக்களை முழுமையாக, சட்ட ரீதியாக பாதுகாப்பதற்கான மேலும் பல வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவில் சொத்துக்களை பாதுகாக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கோவில் சொத்துக்கள் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதை தடுக்க, அந்தந்த பகுதி சார் - பதிவாளர்களிடம், விற்பனை தடை மனுக்களை அளிக்க வேண்டும் என, கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் பிறப்பித்துள்ள உத்தரவில், கோவில் சொத்துக்களை நிர்வகித்து வரும் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர்கள், அந்தந்த பகுதி சார் - பதிவாளரிடம், உரிய தடை மனுக்களை உடனடியாக அளிக்க வேண்டும். மோசடி நபர்கள், கோவில் சொத்துக்கள் தொடர்பாக போலி பத்திரங்களை தாக்கல் செய்தால், சார் - பதிவாளர்களால் அவை நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும். பதிவுத் துறையின், ஆன்லைன் பத்திரப் பதிவு சாப்ட்வேரில், தமிழ் நிலம் என்ற வருவாய் துறை சாப்ட்வேர் இணைக்கப்பட்டு உள்ளதால், இது சாத்தியமாகும். இதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறங்காவலர்கள், செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்நடவடிக்கை ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில், கோவில் சொத்துக்களை பாதுகாக்க விற்பனை தடை மனுக்களை அளித்தால் மட்டும் போதாது, அடையாளம் காணப்படாத மற்றும் ஆக்கிரமிப்பிலுள்ள சொத்துக்களை மீட்க மேலும் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஆன்மிக அன்பர்கள் கூறியதாவது:தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலம், கட்டடங்கள் உள்பட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவற்றில் பல சொத்துக்கள், மன்னர்கள், ஜமின்தார்கள், ஆன்மிக பக்தர்கள் என, பலரால் கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்டவை. பல சொத்துக்கள் உயிலாக எழுதி தானம் தரப்பட்டுள்ளன. பல சொத்துகள் பட்டயமாக எழுதி தரப்பட்டுள்ளன. அது போன்ற சொத்துக்கள், இன்னமும் பத்திரமாக மாற்றப்படாமல் உள்ளன; பத்திரம் இருந்தாலும் பட்டா கிடையாது.இதன்காரணமாக, பல இடங்களில் கோவில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், அதிகாரம் மிக்க, பணபலம் மிக்க நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோவில் சொத்துக்கள் அனைத்தையும் முழுமையாக மீட்டால், அறநிலைத்துறைக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.
மீட்பதற்கான யோசனைகள்: வருவாய்த்துறை பதிவேட்டிலுள்ள கோவில் சொத்துக்களை, 100 ஆண்டுகளுக்கு உண்டான, ஏ- ரிஜிஸ்டர், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். இதற்காக, சம்பந்தப் பட்ட கோவில் செயல் அலுவலர், அறநிலையத்துறை மாவட்ட உதவிக்கமிஷனர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
* பத்திரப் பதிவுத்துறை வசமிருக்கும் கோவில் சொத்துக்களுக்கான பதிவேட்டில், குறைந்த பட்சம், 60 ஆண்டுகளுக்கான வில்லங்கச்சான்று சரி பார்க்கப்பட வேண்டும். பதிவேட்டில் உள்ள சர்வே எண்களை, சம்பந்தப்பட்ட கோவில் சுவாமியின் பெயரில் பத்திரப் பதிவு செய்து பட்டா பெற வேண்டும்.
* சொத்து வரி, மின், குடிநீர் இணைப்பு ஆகியவை அந்தந்த சுவாமியின் பெயரில் மாற்ற வேண்டும். கோவில் சொத்துக்களை எதிர்காலத்தில் பாதுகாக்க, கோவில் முகப்பில், கோவில் சொத்துக்களின் புல எண், பட்டா எண், விஸ்தீரணம், இருக்கும் இடம், எல்லைகள் ஆகியவற்றை பக்தர்கள் எளிதில் பார்க்கும் வகையில், அறிவிப்பு பலகையில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
சிறப்பு நீதிமன்றம்
* ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களின் சொத்துக்களை மீட்க சிறப்பு குழு அமைத்து, அக்குழுவுக்கு அரசு, நீதிமன்றம் சார்பில் சிறப்பு அதிகாரத்தை அறநிலைத்துறை பெற்றுத்தர வேண்டும். கோவில் சொத்து தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க, மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.
* ஆக்கிரமிப்பு சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்க, ஹிந்து சமய அறநிலைத்துறையின் தலைமையிடத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ.,) அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* பதிவுத்துறையின், மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் கோவில் சொத்துக்களை பராமரிக்க, தனி அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அந்த தனி அலுவலர், ஹிந்து சமய அறநிலைத்துறை, தலைமையிடத்தில் பணியாற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி அந்தஸ்திலான அதிகாரியின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படவேண்டும். இந்த தனி அலுவலர்களுக்கு, அந்த மாவட்டத்திலுள்ள கோவில் சொத்துக்களை பாதுகாப்பதும், முறைகேடான வழிகளில் பத்திரப்பதிவு செய்து விடாமல் தடுப்பதும் முக்கிய கடமைப் பொறுப்பாக வரையறுக்கப்பட வேண்டும்.
சுய உறுதிமொழி பத்திரம்: * கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை அடையாளம் கண்டு மீட்கும் வகையில், அவற்றை பற்றிய தகவல் அளிக்கும் பொதுமக்களை கவுரவிக்க வேண்டும். இந்நடவடிக்கைகளையும், ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும்.
* பல கோவில்களின் சொத்துக்களுக்கு மூலப்பத்திரம் இல்லை. எனவே, இந்த சொத்துக்கள் கோவிலுக்கு சொந்தமானவை என, கோவில் செயல் அலுவலரால், சுய உறுதிமொழிப் பத்திரம் (self declaration affidavit) தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட சொத்துக்களை கோவில் சொத்துக்களாக கருதி, பத்திரம் பதிவு செய்யப்பட வேண்டும்.
* இம்மாதிரியான பத்திரப்பதிவுக்கு, முத்திரைத் தீர்வைக் கட்டணம் செலுத்துவதில் இருந்து, தமிழக அரசு விதிவிலக்கு அளித்தால், சட்டப்படியான அனுமதி வழிமுறைகளின் வாயிலாக, பத்திரம் பதிவு செய்ய முடியும். சார் பதிவாளரின் ஏ - ரிஜிஸ்டரிலும் பதிவேற்றம் செய்ய இயலும்.
* சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பாக யார் வில்லங்கச் சான்று கேட்டு விண்ணப்பித்தாலும், சொத்து கோவில் பெயரில் இருப்பது புலப்படும். இதுபோன்ற சட்ட ரீதியான வழிமுறைகளை பின்பற்றி, சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதையும், தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதே வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களுக்கும் சொந்தமான சொத்துக்களுக்கும் பத்திரம் தயாரிக்க முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை, அரசு பிறப்பித்தால், தமிழகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான கோவில் சொத்துக்களை மீட்க முடியும்.இவ்வாறு, ஆன்மிக அன்பர்கள் தெரிவித்தனர்.