மதுரை : கடவுள் வகுத்த நியதிகளை பின்பற்றி வாழ வேண்டும் என சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா பேசினார்.
மதுரை சொக்கிகுளம் காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாதாந்திர அவிட்ட நட்சத்திர விழா நேற்று காலை நடந்தது. உலக நன்மை கருதி ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், அலங்காரம் பூஜை, தீபாராதனை பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு ஜூம் செயலி வாயிலாக சின்மயா மிஷன் சிவயோகானந்தா "யக்ஷ ப்ரச்னம்" என்ற தலைப்பில் பேசியதாவது: மகாபாரதத்தில், தர்மரைத் தவிர பிற நான்கு சகோதரர்களும் தடாகம் ஒன்றில் நீர் அருந்தச் சென்றனர். அதைக் காக்கும் யட்சனின் கட்டளையை அலட்சியம் செய்ததால் மூர்ச்சையாகினர். அதன் பின் வந்த தர்மர் யட்சனின் கட்டளையை ஏற்று அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து சகோதரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தார். மனிதர்களுக்கு இயல்பாகவே செல்வம், புகழ், அறிவு, செல்வாக்கு இவற்றால் ஆணவம், புத்தி தடுமாற்றம் ஏற்படுகிறது. யட்சன் தடாகத்தைக் காப்பது போல் இவ்வுலகைக் காப்பவர் கடவுள். அவர் வகுத்த நியதிகளைப் பின்பற்றி வாழ்வோருக்கு இவ்வுலகம் அமுதமாக இருக்கிறது. இவ்வாறு பேசினார். மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்ரமணியன், பொருளாளர் கே.ஸ்ரீகுமார், வெங்கடரமணி, சந்திரசேகரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.