பதிவு செய்த நாள்
07
ஜூன்
2021
10:06
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நள்ளிரவில் நிர்வாண யாகம் செய்ய முயன்ற பெண்ணை, போலீசார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், ஏராளாமான ஆஷரமங்கள் உள்ளன. மேலும், கிரிவலப்பாதையில் சாலையோரங்களில், 1,500க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் சாதுக்கள் வசிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர், பானு மாதாஜி, 45, கணவனை இழந்த இவர், தன் மகன் முகில், 7, என்பவருடன் கடந்த ஓராண்டாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுடன் பழகி தங்கி இருந்து வந்தார். சில நாட்களாக, கிரிவலப்பாதை ஆஞ்சநேயர் கோவில் எதிரில், அரசு புறம்போக்கு இடத்தில் சிறிய குடிசை போல் அமைத்து அங்கு வசித்து வந்தார். அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நிர்வாண யாகம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், அவரை யாகம் செய்யாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவரிடம் இங்கு யாகம் நடத்தக்கூடாது, குடிசையை அப்புறப்படுத்த வேண்டும், விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர். இந்நிலையில், திடீரென அந்த பெண், நேற்று காலை மாயமானார். சிறுவன் மட்டும் அங்கு உள்ளார்.