பதிவு செய்த நாள்
09
ஜூன்
2021
10:06
புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு அஸ்திரவாரம் அமைக்கும் பணி அக்டோபருக்குள் முடியும் என்றும், டிச.,ல் இருந்து கற்துாண் அமைக்கும் பணி துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதன்படி, கடந்தாண்டு ஆக.,ல், பிரதமர் நரேந்திர மோடி, கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கப்படும் என்பது, உத்தர பிரதேசத்துக்கு நடந்த சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல்களில், பா.ஜ.,வின் முக்கிய பிரசாரமாக இருந்தது. இந்நிலையில் அடுத்தாண்டு துவக்கத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதில் ராமர் கோவில் கட்டுமானம் குறித்த பிரசாரத்தை, பா.ஜ., கையாளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, கோவில் கட்டுமானப் பணிகளை நிர்வகிக்க, ராமர் கோவில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறியுள்ளதாவது: ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பூமிக்கு 50 அடி ஆழத்தில், 400 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலம் உடையதாக பிரமாண்ட கோவிலின் அஸ்திவாரம் அமைகிறது.
டிசம்பரில் துவங்கும்: இந்த அஸ்திவாரம் அமைக்கும் பணி, வரும் அக்டோபருக்குள் முடியும். அதன்பின், கோவிலுக்கான கற்துாண்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள், டிசம்பரில் துவங்கும்.இதற்கான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.