பதிவு செய்த நாள்
12
ஜூன்
2021
05:06
சென்னை:தமிழக தொல்லியல் துறை சார்பில், ஆதிச்சநல்லுார், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில், மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கி உள்ளன.
தமிழக தொல்லியல்துறையின் சார்பில், துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார், சிவகளை; ஈரோடு மாவட்டம் கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள், கடந்த ஜனவரியில் துவங்கின. தேர்தல் அறிவிப்புக்கு பின், அகழாய்வுகள் நடக்கவில்லை. இந்நிலையில், நேற்று முதல், மீண்டும்அகழாய்வு பணிகள் துவங்கி உள்ளன.
ஆதிச்சநல்லுாரில், சர்வதேச தரத்துடன் கூடிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய அரசு, 2019 பட்ஜெட்டில் அறிவித்தது. இதுவரை அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அருங்காட்சியக பணிகளும் துவக்கப்படவில்லை.இந்நிலையில், திருநெல்வேலியில் நேற்று, தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: மத்திய அரசின் அறிவிப்புகள், வெறும் அறிவிப்புகளாக மட்டும் இருந்துவிட கூடாது. ஆதிச்சநல்லுாரில் முன்பு மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வின் ஆய்வறிக்கை இன்னமும் வராமல் உள்ளது; அதை வெளியிட வேண்டும்.மத்திய அரசு, 2019 பட்ஜெட்டில் அறிவித்த சர்வதேச அளவிலான நிகழ்விட அருங்காட்சியகத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.