டேராடூன்: உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.இம்மாநிலத்தில் கேதார்நாத் கோவிலை நிர்வகிக்கும், சார் தாம் மேலாண்மை வாரியத்தை கலைக்க வேண்டும் என, பூஜாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி, நேற்று மூன்றாம் நாளாக, கோவில் முன் மவுன போராட்டம் நடத்தும் அவர்கள், உண்ணாவிரதத்தையும் கடைப்பிடிக்கின்றனர்.போராட்டம் தொடர்பாக, கேதார்நாத் தீர்த் புரோஹித் சமாஜ் எனப்படும் பூஜாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:மேலாண்மை வாரியத்தால், எங்கள் உரிமைகள் பறிபோகின்றன. முதல்வராக பொறுப்பேற்றதும், வாரியம் குறித்து மறுபரிசீலனை செய்வதாக, முதல்வர் தீரத் சிங் ராவத் உறுதியளித்திருந்தார். அதற்கு மாறாக, இப்போது வாரியத்தை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை எங்களால் ஏற்க இயலாது. வாரியம் கலைக்கப்படும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.