பல்லவர் கால மூத்ததேவி கல்வெட்டு விழுப்புரம் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2021 11:06
விழுப்புரம் : விழுப்புரம் அருகே ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பல்லவர் கால மூத்ததேவி மற்றும் சோழர் கால துாம்பு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த கொட்டப்பாக்கத்துவேலி கிராமத்தில் நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவம் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையிலான குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு புதைந்திருந்த பலகைக் கல்லின், ஒரு பக்கத்தில் மூத்ததேவி சிற்பமும், இன்னொரு பக்கத்தில் கல்வெட்டும் பொறிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.இது குறித்து செங்குட்டுவன் கூறியதாவது:5 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் மூத்ததேவியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதன் காலம் கி.பி., 8ம் நுாற்றாண்டு ஆகும். பல்லவர் காலத்தில் மூத்ததேவி வழிபாடு சிறப்புற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.பலகைக் கல்லின் இன்னொரு பக்கத்தில் 17 வரியிலான கல்வெட்டு வாசகம் இடம்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி., 1216 ஆண்டு ஆகும். இப்பகுதியில் ஏரி துாம்பு வைத்தவர் குறித்தும் இதனை நிறைவேற்றிய அதிகாரி குறித்தும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 12, 13 ம் நுாற்றாண்டில் சேட்டை மூத்ததேவியின் வழிபாடு இல்லாததால் அந்த சிற்பம் உள்ள பலகைக் கல்லை உடைத்து ஒரு பகுதியின் பின்புறம் இக்கல்வெட்டினை பொறித்துள்ளனர். இக்கல்லில் மூத்த தேவி சிற்பம் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லின் இன்னொரு பக்கத்தில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செங்குட்டுவன் கூறினார்.