பதிவு செய்த நாள்
18
ஜூன்
2012
04:06
32 வது படலத்தில் அனுகர்மம் என்கிற பிராயசித்த விதி கூறப்படுகிறது. முதலாவதாக எல்லாவற்றிற்கும் சாதாரணமான அனுகர்ம விதியை கூறுகிறேன் என்பது பிரதிக்ஞையாகும். பின்பு ஆலயம் விழுந்த போதிலும் பின்னப்பட்ட பொழுதும் வேறுமாறாக ஆன பொழுதிலும் குறைவு பட்ட பொழுதிலும் ஆலய விஷயத்தில் விழுதல் என்ற காரணத்தினால், திசைகளின் அசைவு ஏற்பட்ட பொழுது உருப்புகள் குறைந்த பொழுதிலும், நீள அகல அளவுகள் குறைந்த பொழுதிலும், அனுகர்ம விதி கூறப்படுகிறது. பிறகு அளவுகள் நீள, அகலம், தேய்மானம் அடைந்த பொழுது உயர்ந்த தான திரவ்யங்களாலோ அல்லது முன்பு எந்த திரவ்யங்களால் ஆலயத்தின் அங்கங்கள் நிர்மாணம் செய்யப்பட்டதோ அந்த திரவ்யங்களால் குறைபாடு உள்ள அங்கங்களை அளவு உள்ளதாக செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு ஆலயத்தில் கர்பக்கிரஹம் முதலிய அங்க விஷயத்தில் செய்ய வேண்டிய அனுகர்மவிதி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வாயம் புவாதி லிங்க விஷயத்திலும் செய்ய வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. மானுஷாலயத்தில் நாகரம் முதலிய விமானங்களிலும் கர்பக்கிரஹ விஷயத்திலும் ஆத்யேஷ்டிகா கர்பன்நியாசம் முதலிய விஷயங்களில் செய்ய வேண்டிய அனுகர்ம விதி அனுஷ்டிக்கப்படுகிறது. பிறகு சிவலிங்க விஷயத்தில் நல்ல தன்மை உடையதும் நல்ல தன்மை இல்லாததுமான லிங்கத்தை அசையக்கூடாது என கூறி நல்ல தன்மை உள்ளதும் இல்லாததுமான லிங்கத்தின் இலக்கணம் கூறப்படுகிறது. அவ்வாறு ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்ட விஷயத்தில் பலன் பயன் அற்றதாக ஆகும் ஜீர்ணம் உள்ள லிங்கம் பூஜிக்கத் தகுந்தது. தகாதது எனவும் கூறப்படுகின்றன. ஆகையால் சாஸ்திர முறைப்படி சுகத்தின் பொருட்டு ஜீர்ணம் முதலிய லிங்கங்களை எடுக்கவும் என கூறி தள்ளுபடி செய்யப் படவேண்டிய ஜீர்ணாதி 16 லிங்கங்கள் நிரூபிக்கப்படுகின்றன. பிறகு தேய்மானம் உள்ள தோஷம் உள்ள பீடம் பிரம்ம சிலை விருஷபங்கள் இவைகள் தள்ளுபடி செய்பவைகளாகும்.
பிறகு விஷமம் என்ற குறை உள்ள இடத்தில் உள்ள லிங்கங்கள் அவ்வாறே அசைந்தது. அசைவிக்கப்பட்டது. விழுந்தது விழப்பட்டது விழும்படி செய்யப்பட்டது. ஆகிய லிங்கங்கள் அறியாமையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது, சைவ மந்திரம் இன்றி வேறு மந்திரம் வேறு கிரியை இவைகளால் ஸ்தாபிக்கப்பட்டதுமான லிங்கங்களையும், தள்ளப்பட்ட சிலையால் செய்யப்பட்ட லிங்கமும் ஒரு பொழுதும் நன்கு ஸ்தாபிக்கப்பட்டதாக எண்ணுவதற்கு இடம் இல்லை. ஆகையால் அவைகள் ஜீர்ணமானால் அதே விதிப்படி முறையாக ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது. பிறகு அசுரர்கள் முனிவர்கள், தேவர்கள் தத்துவஞானிகள் இவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் ஆலயம் இவைகள் தேய்மானம் ஆனாலோ லிங்கம் பிளவு பட்டதாக ஆனாலும் முறைப்படி அசைக்கக் கூடாது. ஆனால் அரசன் திருடன் அக்னி இவைகளின் பயத்தால் காப்பாற்ற படுவதற்காக லிங்கத்தை வேறு இடத்தில் வைக்கவும் ஜலத்தினால் முழுகப்பட்டாலும் அடித்துச் செல்லப்பட்டாலும் அந்த லிங்கத்திற்கு அசைக்கும் தோஷம் இல்லை. அந்ததோஷம் லக்ஷ ஜபத்தால் சுத்தம் ஏற்படுகிறது. இப்பேர்ப்பட்ட லிங்கங்களின் விஷயத்தில் இடையூர் இல்லாத வேறு பிரதேசத்தில் லிங்க ஸ்தாபனம் செய்ய வேண்டும் என ஸ்தாபன முறை அறிவிக்கப்படுகிறது. சலபேர பிம்பங்களிலும் இந்த முறை ஸமானமாகும் எனக் கூறி லிங்களின் விஷயமான அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. பேரம் ஜீர்ணம் முதலிய தோஷங்களால் தேய்மானம் அடைந்தால் வேறு பிம்பம் அமைக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சிலாமயம் பக்குவமான மண்களால் ஆனது மரத்தினால் ஆனவை ரத்தினங்களால் செய்யப்பட்டவைகளான பிம்பத்தில் வயிற்றுப் பகுதி முகம் புருவ ரேகை இவைகளின் குறைவிலும் அங்க ஹீனத்திலும் அந்த பிம்பங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.
உலோகத்தினால் பக்குவம் இல்லாத மண்ணால் செய்யப்பட்ட பிம்பமும் கை மூக்கு, கால், காது. பற்கள், இவைகளால் குறைந்த பொழுதிலும் அணிகலன்கள் விடுபட்ட பொழுதிலும் அந்தந்த பொருள்களால் கெட்டியாக்கப்படவேண்டும். உத்தமமான அவையங்கள் குறைந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்து விட்டு வேறு புதியதான பிம்பம் செய்து ஸ்தாபிக்கவும், கால், கை, இழந்த பொழுது அந்த பிம்பத்தை தள்ளுபடி செய்யவும், அல்லது அந்த அங்கங்களால் சேர்க்கும் தன்மையை செய்யவும் என கூறப்படுகிறது. பிறகு சரீர அங்கங்களில் அங்கம் உபாங்கள் பிரத்யங்கம் என்று மூன்று வகையாகும் என கூறி அவைகளின் அமைப்பும் கூறி அவைகள் குறைபாடு உள்ளது செய்ய வேண்டிய அனுகர்மவிதி கூறப்படுகிறது. பிறகு கருங்கல்லாலும் பக்குவமான மண்ணினாலும் செய்யப்பட்ட பிம்பம் குற்றம் உள்ளதாக இருந்தால் ஜலத்தில் போட்டுவிடவும், குற்றம் உள்ள ரத்னத்தினால் ஆன பிம்பம் தள்ளுபடி செய்ய தக்கதாகும் அல்லது வேறு இடத்தில் செய்வதற்கு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் குற்றம் உள்ள உலோக திரவ்யத்தினால் செய்யப்பட்ட பிம்பம் வேறுபிம்பம் செய்யும் கார்யத்திற்கு கொடுக்க வேண்டும். அந்த பிம்பத்தின் திருவாசியையோ பீடத்தையோ அதே பிம்பத்திற்கு அல்லது வேறு பிம்பத்திற்கு சேர்க்கப்படவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கபடவேண்டும் என கூறப்படுகிறது. குற்றத்தினால் குறைவுபட்ட பிம்ப சம்பந்தமான பீடம் பிரம்மசிலை, அதனுடைய விருஷபம் எல்லாம் சேர்க்கப்பட வேண்டுமா அல்லது தள்ளுபடி செய்ய வேண்டுமா என்று விசேஷம் கூறப்படுகிறது. குற்றம் உள்ள சிலாபீடத்தில் பெயர்ந்து எடுத்து வேறு சிலர் பீடம் சேர்க்கவும். சிலா பீடம் கிடைக்காத சமயத்தில் செங்கல்லால் சேர்க்கவும் பிறகு சைல பிம்பத்திற்கு சமமாக சேர்க்கக் கூடாது. பீடத்தின் அளவு முன்பு போல் இருக்க வேண்டும். சதுர பீடத்தில் விருத்த பீடமும் விருத்த பீடத்தில் சதுரபீடமோ செய்யக் கூடாது என பீடம் அமைக்கும் விஷயத்தில் அனுகர்ம விதி கூறப்பட்டுள்ளது. மண்டபம் பரிவார பிம்பம் பரிவார ஆலயம் உட்பிரகாரம் இவைகளில் முன்பு கூறப்பட்டுள்ள அனுகர்ம விதிப்படி செய்யவும் என அறிவிக்கப்படுகிறது.
அனுகர்ம விதியில் சாஸ்திரபடி பிரமாணத்துடன் விதிக்கப்பட்ட அலங்காரத்துடன் கூடிய விஷயத்தில் பூமி கூடுதல் குறைதல் என்ற கார்யம் அரசனுக்கு கஷ்டம் கொடுக்கும் என கூறப்படுகிறது. பிரமாணம் இல்லாத விஷயத்தில் அதிகப்படுத்தும் கார்யத்தில் நல்ல குணமும், தோஷமும் வர்ணிக்கப்படுகிறது. கோபுர விஷயத்தில் அனுகர்ம விதி ஆலயத்திற்கு கூறியபடி அனுஷ்டிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. கோ சாலை முதலிய கொட்டகைகள் வீடுகள், மாளிகைகள் இவைகளின் விஷயத்திலும் அனுஷ்டிக்க வேண்டிய அனுகர்ம விதி விளக்கப்படுகிறது. முடிவில் சொல்லப்பட்ட எல்லாவற்றின் விஷயத்திலும் பெயர்த்து எடுக்க வேண்டிய முறை கூறப்படுகிறது என்று சொல்லி பெயர்த்து எடுக்கும் செயலை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு அறியாமையாலும் அவ்வாறே ஜோஸ்யர்கள், சில்பி, சிவ தீட்சை அற்றவர்கள் இவர்களால் சிவலிங்கம் முதலியவைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறியபடி சிவாகம சிவசாஸ்திர சம்ஸ்காரத்தை ஆசார்யன் செய்யவேண்டும். இவ்வாறே சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் என்ற தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கத்தையும் மறுபடியும் சிவ ஸம்ஸ்காரம் செய்து ஸ்தாபிக்கவும், பிறகு அந்த லிங்கத்தையும் பூஜிக்கவும் என கூறப்படுகிறது. பிறகு சைவ சித்தாந்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட பாசுபதம் முதலிய தந்திரங்கள் நிரூபிக்கப்படுகின்றன. அதில் பாசுபதம் ஸோம சித்தாந்தம் லாகுளம் என மூன்று வகைப்படும். அவைகளில் ஒவ்வொன்றும் வாம, தட்சிண சித்தாந்த, பிரிவாக மூன்று விதமாகும் என்று 9 விதங்கள் ஆகும் என கூறப்படுகின்றன. பிறகு காருடம், பைரவம், வாமதந்திர, வியவஸ்திதம், பூததந்திரிய விவஸ்திதம் என்று நான்கு விதமாக சைவ தந்திரங்கள் கூறப்படுகின்றன. அவைகளும் முன்பு போல் வாம, தட்சிண சித்தாந்த பிரிவினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாக ஆகின்றன. இவைகளால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் ஆதிசைவர்களால் பூஜிக்கப்படுகின்றன. (வேறு கூறப்படப் போகிற ரவுத்திர பேதத்தின் உள்ளிட்டதான யாமள தந்திரத்திலிருந்து (வேறானதான) யாமளதந்திரம் உள்ளது. அது இங்கு மிஸ்ரம் என்று கூறப்படுகிறது). அந்த யாமள தந்திரமும் வாம தட்சிண, சித்தாந்த பிரிவினால் மூன்று விதமாகும் அதில், வாமம், யாமளம், பார சிவார்ஹகம், தட்சிணம் யாமளம் பைரவார்ஹாகம், சித்தாந்த யாமளம் சைவமாகிய ஆதிசைவர்க்கு ஆகும் என கூறப்படுகிறது.
அதுவும் வாம, தட்சிண, மிஸ்ரம், என்ற பேதத்தினால் பலவிதமான ரவுத்ரங்கள் கூறப்படுகின்றன. பிறகு கூறப்பட்ட பாசுபத ஸோம லாகுல தந்திரங்கள் காருட, பைரவ வாம தந்திர, பூத, அதிமார்க்கம், என்கிற தந்திரங்களும் காபால பாஞ்சராத்திர, பவுத்த, ஆர்கத, பிருகஸ்பதிமத, சாங்கியயோக வைகானச, வேதாந்த பீமாம்சை, புராண, இதிகாச, ஷடங்க, சூத்திர முதலிய கிரந்தங்களும் தர்மசாஸ்திரம் வாஸ்து சாஸ்திரம், நான்கு வேதமும், எண்ணப்படுகின்றன. பிறகு இந்த எல்லாம் ரவுத்திரம் சித்தாந்தம், சவும்யம் என்று ஆகிறது என கூறப்படுகிறது. பிறகு ருத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட விஷ்ணு முதலிய பிரதிமைகள் எல்லாம் சைவத்வமாக பிரதிஷ்டை செய்து சைவன் அந்த எல்லா பிம்பத்தையும் பூஜை செய்யவும் பிறகு ஆதி சைவனால் ஸ்தாபிக்கப்பட்டும், பூஜிக்கப்பட்டதுமான லிங்காதி பிம்பங்களை ரவுத்திரம் முதலிய தந்திரங்களால் பூஜிக்கப்பட்டால் அந்த பூஜையால் அந்த ராஜ்யம், ராஜகிராமம் கிராமங்கள் அங்கு வசிக்கும் ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும். இவ்வாறாக முன்பு ருத்திராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதை பிறகு ஆதிசைவனால் ஸம்ஸ்காரம் செய்யப்பட்டு பூஜை செய்வதால் அந்த பூஜையை மறுபடியும் ரவுத்திர தந்திரங்களால் பூஜித்தால் அப்பொழுது சேனையுடன் கூடின அரசன் மந்திரி அமைச்சர்கள், பிராம்மண க்ஷத்திரிய சூத்திரர்கள், வைஸ்யர்கள், மற்ற எல்லா ஜனங்களுக்கும் அழிவு ஏற்படும் ஆகையால் அரசன் முயற்சியினால் அந்த கிரியைகளை நிவாரணம் செய்யவும் என கூறப்படுகிறது.
பிறகு ரவுத்ராதி தந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்டதும் பிறகு ஸம்ஸ்கார பூர்வமாக ஆதி சைவனால் பூஜை செய்யும் சமயத்தினால் அரசறருக்கு வெற்றியும் ஆயுள் அபிவிருத்தியும் உண்டாகிறது என நிரூபிக்கப்படுகிறது. பிறகு ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்ட ஆபிசாரலிங்க விஷயங்களில் அந்த ரவுத்திரர்களால் பூஜிக்கப்பட்ட ஆபிசார மந்திரங்களை எடுக்கும் முறை முறைப்படி விளக்கப்படுகிறது. பிறகு ஸ்வயம்பூ தெய்விக பாண, ரிஷி, கணபர்கள் ஆகியவர்களின் லிங்கங்களின் விஷயத்தில் உடைந்தாலும் இரண்டாக பிளவுபட்டாலும் வெடித்து போனாலும் அங்கு செய்ய வேண்டிய பிராயச்சித்தம் கூறப்படுகிறது. இந்த லிங்கங்களில் எல்லா அங்கங்களாலும் சிதறப்பட்டதாக ஆகும். ஆனால் மறுபடியும் புதிய பிம்பங்களை ஏற்படுத்தி பூஜிக்கவும் என கூறப்படுகிறது. ஆலயத்தின் அகல நீளமும் ஸ்தலத்தில் ஸ்தம்பம் முதலிய அங்கங்களிலும் லிங்க அளவு பீடம் அமைக்கும் முறை துவாரம் முதலியவைகளின் அங்கங்கள் பிரம்ம சூத்திரம் ஆகிய இவைகளில் அளவு குறைந்த பொழுது குறைபாட்டுடன் எண்ணப்படுகிற நிரூபணம் காணப்படுகிறது. இவ்வாறாக 32வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.
1.எல்லாவற்றிற்கும் பழமையான அனுகர்மம் என்ற பிராயச்சித்தம் கூறுகிறேன். ஆலயம் இடிந்து, பிளவுபட்டோ, ஆலய முகப்பு குறைபாடு ஏற்பட்டிருந்தாலும் திசைக் குழப்பம் ஏற்பட்டிருந்தாலும்
2. ஆலய அமைப்பு குறைவுபட்டிருந்தாலும், நீள அளவு உயர அளவு குறைபட்டிருந்தாலும் அந்தந்த திரவ்யங்களால் மிகவும் உயர்ந்ததாக பொருத்தமான அளவுள்ளதாக செய்ய வேண்டும்.
3. அளவோடு கூடியிருக்கும் எந்த வஸ்த்து முன்பு இருந்ததோ அந்த திரவ்யங்களை முன்புள்ள அளவு படியே செய்யவேண்டும். அளவுடன் கூடிய விமானத்தின் அதிஷ்டானம் முதலியவை
4. அவ்வாறே லக்ஷணமில்லாமல் இருந்தால் அதற்கு மாறுபட்ட முறையாக, முறைப்படி அளவுகளால் அமைக்கப்படவேண்டும். ஸ்வாயம்புவம் என்ற அமைப்புள்ள லிங்கங்களின் கோயில் அமைப்பு விஷயத்தில் முன்பு உள்ள அளவுப்படி செய்ய வேண்டும்.
5. சாஸ்திரத்தில் கூறப்பட்டவாறு அந்த ஆலயங்களை அமைத்தால் அதில் குற்றமில்லை. அல்லது வெளியில் கருங்கல்லாலும் உள்புறம் செங்கல்லாலும் அமைக்கலாம்.
6. மானுஷலிங்க ஆலய அமைப்பில் கூடம் பஞ்சரம், கோஷ்டம் என்ற பகுதிகள் உரிய இடத்தில் அமையாது இருந்தால் விசேஷமாக அவைகளுக்கு உகந்ததான இடங்களில் அமைக்க வேண்டும்.
7. நாகரம் என்ற அமைப்புடையதும் வேசரம் என்ற அமைப்புடையதும் திராவிடம் என்ற அமைப்புடையதும், வராடம் என்பது முதலான அமைப்பு உடைய கோபுரங்களை உடைய ஆலயம் செப்பனிடும் விஷயத்தில் அந்தந்த அமைப்புள்ள படியே அமைக்க வேண்டும்.
8. விமானம் கடினமாயும், கடினமில்லாமலும் உள்ளதாக ஆலயமிருக்கலாம். ஆலயம் பழுது பட்டிருந்தால் கிழக்கு முதலான நான்கு திசைகளில் ஓர் இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும்.
9. கிழக்கு அல்லது வடக்கு திக்கிலோ அக்னி திசை முதலான கோண திசைகளிலோ வாயில் படியை முன்புள்ள முறைப்படியோ அல்லது மேற்கு முகம் உள்ள வாயில் படி உள்ளதாகவோ அமைக்க வேண்டும்.
10. கர்பக்கிரஹம், அஸ்திவார கல் முதலில் வைக்கப்பட்ட கல் பழுதுபட்டாலும் நாசிகை முதலிய அங்கங்கள் பழுது பட்டாலும் மறுபடியும் முன்பு உள்ள அமைப்பு படியே செப்பனிட வேண்டும்.
11. ஆலயங்கள் சாஸ்திரத்தில் கூறிய உரிய முறைப்படி அமைக்கப்படாமல் இருந்தால் சாஸ்திர முறைப்படி உரிய அளவுள்ளதாக அமைக்க வேண்டும். ஆலயம் அமைப்பு முறைப்படியும் தோஷம் உள்ளதாகவும் இருந்தாலும் சிவலிங்கத்தை அசைக்க கூடாது.
12. சுஸ்திதம் என்ற நல்ல நிலையில் இருப்பது என்பது பழுது பெற்ற ஆலயமும் பூஜை உள்ளதாக இருப்பது ஆகும். துஸ்திதம் என்ற குறைபாடுகளுள்ள நிலையானது பழுது அடைந்தது என்ற நிலை இன்றியும் பூஜை இல்லாமலும், இருப்பது ஆகும்.
13. ஜீர்ணோத்தாரணம் செய்யப்படுமேயானால் கர்த்தாவிற்கு மிக உயர்ந்த பலன் கிடைக்கிறது. மிக ஜீர்ணமான கோயில் பூஜிக்கப்பட்டாலும் தீமை, பூஜிக்காமல் இருந்தாலும் தீமை
14. ஆகையால் இரண்டு விதத்திலும் தீமை விளைவதால் நன்மையின் பொருட்டு சாஸ்திரப்படி புதுப்பித்தல் வேண்டும். ஜீர்ணமானது நெருப்பில் பாதகமானது, மிக மெல்லியது, மிகவும் பருத்தது, அளவில் குறைந்தது, அளவிலே அதிகமானது
15. உடைந்தது அடிபட்டு சிலைபெயர்ந்தது ஸமமாக இல்லாதது. லக்ஷணத்திற்கு அப்பாற்பட்டது இடிந்துவிழுந்தது, மூடப்பட்டது, வெடித்தது
16. துஷ்ப்ரயோகமானது நடுபருத்தது நன்கு தெரியாத அங்கம் இந்த பதினாறு லிங்கமும் தள்ள வேண்டியவை விளக்க வேண்டியவை.
17. மிகஜீர்ணமாக தள்ளத்தகுந்த பீடம் அல்லது பிரும்ம சிலை விளக்கத் தக்கது. அது போலவே மிக உயரமானது. பள்ளமானது. அல்லது தரைமட்டம் உள்ளது திக்குகளை அறிந்து அமைக்க முடியாகமல் இருப்பது விஷமஸ்தானத்திலிருப்பது இவை ஐந்தும் விளக்கத்தக்கவை.
18. இவ்வாறே அசைகின்ற, அசையும்படி செய்யப்பட்ட கீழே விழுந்தது விழும்படி செய்யப்பட்ட மூடனால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கமும் அவ்வாறே மந்திரக்ரியையின்றி ஸ்தாபிக்கப்பட்டதும் விளக்கத்தக்கது.
19. விலக்கத்தக்க சிலைகளால் ஆன லிங்கத்தை ஸ்தாபிக்கக்கூடாது. அவ்வாறே எந்தவித மான குற்றங்கள் இல்லாமல் இருக்குமானால் அவைகளை ஸ்தாபிக்கவும்.
20. முனிவர்களோ தேவர்களோ தத்வஞானிகளோ அசுரர்களோ பிரதிஷ்டை செய்யப்பட்டு அவை ஜீர்ணமாக இருந்தாலும் உடைந்திருந்தாலும் அதை எடுக்கக்கூடாது.
21. அரசன், திருடன், நெருப்பு, ஜலம் இவைகளால் ஏற்படும் பயத்தினால் வேறு இடத்தில் ஸ்தாபிக்கவும். ஜலத்தினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலும் அபஹரிக்கப்பட்டிருந்தாலும்
22. ஐம்பதாயிரம் சிவமந்திர ஜபத்தால் லிங்கத்திற்கு சுத்தித் தன்மை ஏற்பட்டுயிருக்குமேயானால் ஸ்தாபநம் செய்வதில் எவ்வித தோஷமும் இல்லை. அல்லது முன்பு உள்ளது போலவே வாயில் வைத்து வேறு இடத்தில் ஸ்தாபனம் செய்யலாம்.
23. தண்ணீர் பாதகம் உள்ள லிங்கத்தை நூறுதண்டம் தள்ளியோ ஸ்தாபனம் செய்யவேண்டும். ஆயிரம் வில் அளவு தள்ளி லிங்கத்தை ஆதரவுடன் ஸ்தாபிக்க வேண்டும்.
24. உருவத்திருமேனிக்கும் இது பொதுவானது. கடினமில்லாத சிலாமயமான திருமேனி, பக்குமான மண்ணாலானவை, மரத்தாலானவை, ரத்னக்கல்லானவைகளான பிம்பங்களின்
25. இமை, புருவம், முகம் இவைகளின் ரேகைபழுதுபட்டால் விசர்ஜனம் செய்ய வேண்டும். அங்கங்கள் குறைவுபட்டால் அதை தள்ளுபடி செய்யவேண்டும் என்பதில் விசாரணைக்கு இடம் இல்லை.
26. உலோகம், மண் இவைகளால் செய்யப்பட்ட உருவத் திருமேனியில் கை, மூக்கு, ஆபரணங்கள், காது, பற்கள் இவைகள் இல்லாதிருப்பின் அந்த உருவத்திற்கு மேனியை செய்யப்பட்ட பொருள்களினாலோ நன்கு செப்பனிடவேண்டும்.
27. உத்தமாங்கமான தலை இல்லாது போனால் அதை நீக்கிவிட்டு புதிதாக பிம்பம் அமைக்க வேண்டும். கை கால் இல்லாது இருப்பின் அதை விலக்கலாம். அல்லது மறுபடியும் செப்பனிடலாம்.
28. உபாங்கம், அங்கம், ப்ரத்யங்கம் என்று சரீரங்கம் மூன்றுவிதம் கூறப்பட்டுள்ளது. பிரதான சூலம் அங்கமாகும். அது ப்ரும்மதண்டம் என்று இவ்வாறு சொல்லப்படுகிறது.
29. மார்பு, இடுப்பு, முழங்கை, புறங்கை, மணிக்கட்டு, துடை, முழங்கால், கணுக்கால், இவைகள் உபாங்கங்கள் என்று கூறப்படுகிறது.
30. இவைகளை போக மீதி உள்ளது ப்ரத்யங்கம் என்று அறியவேண்டும். பிரும்மதண்டம் இல்லாது போனால் சூலம் ஸ்தாபனம் செய்யவேண்டும்.
31. ப்ரத்யங்கம், உபாங்கம் இல்லாதுபோனால் மறுபடியும் சேர்க்க வேண்டும். முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ப்ரும்மதண்டம் லக்ஷணத்துடனிருப்பின்
32. வேறுவைக்காமல் அதையே ஸ்தாபித்து விடலாம். முறிவு முதலானவை ஏற்பட்டிருக்குமேயாகில் மறுபடியும் ஸ்தாபிக்க வேண்டும்.
33. பிரும்மதண்டம் சிலை கல் அல்லது மண் அல்லது சுடப்பட்ட மண்ணாலான சிலையின், பிரும்ம தண்டம் பின்னமானால் ஆழமான தண்ணீரில் போட்டு விடவேண்டும். ரத்தினத்தினால் ஏற்பட்டதை விலக்க வேண்டும். அல்லது சாணை தீட்டி உபயோகிக்க எடுத்துக் கொள்ளலாம்.
34. மரத்தால் செய்யப்பட்டிருப்பது பின்னமானால் சிவாக்னியில் ஸமர்ப்பிக்கவேண்டும். அல்லது பூமியில் புதைக்க வேண்டும். ஜலத்தில் போடவேண்டும். உருக்கக்கூடிய உலோக பொருளாக இருந்தால் சிலை செய்ய சேர்த்துக் கொள்ளலாம்.
35. அல்லது பிம்பத்தின் அதன் திருவாசியை, பீடத்தையோ செய்யலாம். அங்கேயோ அல்லது பிம்பம் செய்ய வேறு இடத்திலோ சேர்க்கலாம். பிரதிஷ்டை செய்யாத பிம்பமாக இருந்தால் அதன் பீடம் முதலியவற்றில் சேர்த்துவிட வேண்டும்.
36. அல்லதுவேறு தேவதைகளுக்கும் அந்த பீடத்தை உபயோகித்து விடவும். பீடம் லக்ஷணத்தோடு அமைந்திருப்பின் அதுபோலவே பிரும்ம சிலையும் விருஷபத்தையும்
37. அவைகளை எங்கும் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது விலக்கினாலும் விலக்கலாம். சிலையால் ஆனபீடமாக இருந்தால் பழுதுபார்த்து பின் அதை எடுத்து கற்சிலையினால்தான் சேர்க்கவேண்டும்.
38. சிலாமயமான பீடம் கிடைக்காவிடில், செங்கற்களால் பீடத்தை பொருத்தவேண்டும். பிறகு சிலாமய பீடத்தை சேர்த்து உருவம் முதலியவை முன்போல செய்யவும்.
39. நாற்கோணமான பீடத்தில் வட்டத்தையோ, வட்டத்தில் நாற்கோணத்தையோ சேர்க்கக்கூடாது. மண்டபத்திலோ, பரிவாரத்தையோ, பரிவாரா லயத்திலோ
40. அனுகர்ம விதியை முன்புபோல் முறைபடி செய்யவேண்டும். அர்த்த மண்டபம் சாலா முதலியவைகளை முன்போலவே ஏற்படுத்தவேண்டும்.
41. அதைக்காட்டிலும் பூமியின் அளவு அதிகமோ, குறைவோ இருந்தால் அது நாட்டிற்கும், அரசனிற்கும் ஆபத்துக்களை கொடுக்கும். சாஸ்திரத்திலே சொன்னபடி பிரமாணத்தோடும் அலங்காரத்தோடும் அமைக்க வேண்டும்.
42. சாஸ்திர பிரமாணம் இல்லாதிருக்கும் பொழுது அதை வேறு விதமாக அமைப்பதால் குற்றம் இல்லை. கிழக்கிலும், வடக்கிலும் அதிகப்படுத்துவது மேலாகும். மேற்கில் அதிகப்படுத்துவது சத்ருக்களால் அழிவு ஏற்படும்.
43. தெற்கில் வாஸ்த்து விருத்தி ஏற்பட்டால் கர்தாவிற்கு மரணம் உண்டாகும். அதனால் அது விலக்கத்தக்கது. ஆகையினால் நான்கு பக்கத்திலும் ஸமமான அதிகமோ, சற்றே குறைவோ, கூடவோ குறைவான விதியோ கூடாது.
44. ஆலயத்திற்கு சொன்னவாறு கோபுரத்திற்கும் அனுகர்மம் செய்யவேண்டியது. சிறப்பான, கிராமங்கள், வீடுகள், சாலைகள்
45. விஸ்தாரம் நீளம் இவைகளில் குறைவு கூடாது. சமமாகவோ அல்லது அதிகமாகவோ அமைக்கலாம்.
46. யுக்தி சாமர்த்யத்தைக் கொண்டு நான்கு பக்கங்களிலும், கிழக்கு வடக்கு இவைகளில் விருத்தி செய்யலாம். வீடு, தோரணம் முதலியவைகளின் எண்ணிக்கையால் பூமியை அமைக்க வேண்டும்.
47. எந்தவிதத்திலும் முன் சொன்னபடி குறைவு நிச்சயமாக இருக்கக் கூடாது. மேற்கூறிய எல்லாவற்றிற்கும் ஒரு விசேஷ விதி கூறப்படுகிறது.
48. அதில் உபயோகப்படும் பொருள்கள் உயர்ந்த பொருள்களாக இருக்குமானால் குறை வாகவோ, அதிகமாகவோ அமைப்பதில் தோஷமில்லை. ஆலயம் சுவர் இவைகள் ஜீர்ணமானால் அஸ்தி வாரத்தின் அளவிலேயே இருக்க வேண்டும்.
49. ஆனால் கட்கமயமான அஸ்திரத்தில் மந்திரங்களை நியஸித்துவிட்டு வேறொன்றை கொண்டு வரவேண்டும். லிங்கத்தின் விஷயத்தில் ஜலம் நிரம்பிய கலசத்தில் அல்லது பீடத்தில் தியானித்து தினமும் பூஜை செய்து வரவேண்டும்.
50. அல்லது அதை விஸர்ஜனம் செய்துவிட்டு வேறொன்றையும் ஸ்தாபிக்கலாம். முன்பு எந்த வடிவமோ எந்த அளவோ அவ்விதமே அமைக்க வேண்டும். இதில் மாற்றம் கூடாது.
51. இவைகள் எல்லாவற்றிற்கும் புதுப்பித்தற்கு சாஸ்திர விதிமுறை கூறப்படுகிறது. ஆலய முன்னதாகவோ, தெற்கிலோ, ஈசானத்திலோ, மண்டபம் அமைக்கவேண்டும்.
52. ஒரு தோரணத்தோடு கூடியதும் தர்பை மாலையோடு கூடியதும், கிழக்குத்வாரத்தோடு கூடியதுமான மண்டபம் அமைக்கவேண்டும்.
53. ஆசார்யன் த்வார பூஜை முதலியவைகள் செய்து ஸ்தண்டலத்தில் ஈஸ்வரனை அர்ச்சிக்கவும். குண்டங்களில் ஆவிர் பவித்துள்ள அக்னியில் மந்திர தர்பணம் செய்து
54. ஸமித்து நெய் எள் ஹவிஸ்இவைகளோடு வாஸ்த்துவிற்கும், திக்குகளுக்கும் பலி கொடுத்து ஆசார்யன், ஆசமனம் செய்து
55. ஸகளீகரணம் செய்து சிவ தீக்ஷிதர்களுக்கு உணவளித்து தேவனிடம் தெரிவித்து ஹேப்ரயோ இந்த தோஷத்துடன் கூடிய கிரியைக்கு
56. தோஷத்தை நீக்குவதற்கு சாந்தி என்ற பரிஹாரம் செய்யவேண்டும் என்பது உங்களுடைய திருவாக்காகும். அந்த தோஷத்தை போக்குவதற்காக என்னை சதாசிவன் அண்டியுள்ளார்.
57. இவ்வாறாக கர்மாவை கூறி சாந்திஹோமம் செய்யவும். சிவமந்திரத்தினால் பால், நெய், தேன், அருஹம்பில் இவைகளால் எட்டாயிரம் ஆவிர்த்தி
58. ஹோமம் செய்து, கும்பத்தை ஸ்வாமி சமீபம் எடுத்துச் சென்று ஹ்ருதய மந்திரத்தினால் அபிஷேகம் செய்து வ்யாபகேஸ்வரா என்ற பதத்தை நான்காம் வேற்றுமையுடன்
59. ஓங்காரத்தை முதலாகவும் நம: என்ற பதத்தையும் சேர்த்து கூறுவது மூலமந்திரமாகும். (ஓம் வ்யாபகேஸ்வராயநம:) வ்யாபகேச்வரா என்ற பதத்தை ஹ்ருதயம் முதலான அங்கமந்திரங்களோடு
59. நான்காம் வேற்றுமையுடன் பிரணவத்துடன் கூடியதாகவும் கூறவும். (ஓம் வ்யாபகேஸ்வர ஹ்ருதாய நம: ஓம் வ்யாபகேஸ்வர சிரஸேநம:, ஓம் வ்யாபகேஸ்வர சிகாயை நம: ஓம் வ்யாபகேஸ்வர கவசாய நம: ஓம் அஸ்த்ராய நம:)
60. நம: என்ற பதத்தை முடிவில் உள்ளதாக ஹ்ருதயம் முதலான ஐந்து அங்கங்களை கூறவும். பீஜாக்ஷரமின்றி அந்த மந்திரங்களால் ப்ரணவாஸநத்தில் லிங்கத்தை
61. ஸ்தண்டிலத்தில் இருப்பவராக சந்தனம், புஷ்பமாலை இவைகளால் பூஜித்து பிறகு ஆஸ்ரயித்து ஸத்வமான அஸ்திரத்தை சொல்லிக்கொண்டு கர்மாவை கேட்கவும்.
62. ஏதோரு ஸத்வதன்மையானது லிங்கத்தை அடைந்து இருக்கிறது. அந்த சத்வமானது சிவனின் ஆக்ஞைகளால் லிங்கத்தைவிட்டு விருப்பப்படி செல்லட்டும்.
63. வித்யாதேகம், அஷ்டவித்யேஸ்வரர்களுடன் கூடிய பரமேஸ்வரன் இங்கு ஏற்படட்டும். இவ்வாறாக கூறி மஹாஸ்திர மந்திரத்தினால் பராங்முகார்க்யம் கொடுக்க வேண்டும்.
64. இவ்வாறாக பரமேஸ்வரனை கும்பத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். கும்பமானது பிம்பத்திற்கு முன்பாக ஸ்தண்டிலத்துடன் கூடியதாகவும் ஸ்வர்ணம் வஸ்திரம் இவைகளுடன் கூடியதாகவும்.
65. கூர்ச்சத்துடன், மாவிலை, தேங்காய், மூவிழைநூல், புஷ்பம் இவைகளுடன் கூடியதாகவும் அமைத்து, முன்பு கூறப்பட்ட அமைப்பு உள்ளபடியே வர்தனியையும் அதில் அம்பிகையும் ஆவாஹனம் செய்யவேண்டும்.
66. சந்தனம், புஷ்பம், இவைகளால் பூஜை செய்து பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். தினம்தோறும் சாந்திஹோமத்துடன் கூடியதாக நித்யபூஜை செய்யவும்.
67. பிறகு பாசுபதாஸ்திர மந்திரத்தினால் ஒவ்வொரு பாகத்திற்கும் ஆயிரம் ஆவிருத்தி ஹோமம் செய்து சாந்தி கும்ப தீர்த்தத்தினால் பிரோக்ஷணம் செய்து தர்பைகளால் ஸ்பர்சித்து கொண்டவாறு ஜபிக்க வேண்டும்.
68. விலோமார்க்யம் என்ற பரான்முகார்க்யத்தை கொடுத்து தத்வ தத்வேஸ்வரர்களையும் பிறகு லிங்கம் ஆவடையாரையும் அடைந்த மூர்த்தி மூர்த்திஸ்வரர்களையும் விசர்ஜனம் செய்ய வேண்டும்.
69. தங்கம், வெள்ளி முதலான கயிற்றால் வ்ருஷபத்தினால் அசைக்கச் செய்யவும். லோகத்து ஜனங்களால் மங்களம் உண்டாகட்டும் என்று நினைத்து ஜலத்தில் லிங்கத்தை போட்டுவிட வேண்டும்.
70. மறுபடியும் புஷ்டி ஏற்படுத்துவதற்காக திக் பாலகர்களின் திருப்திக்காகவும் ஹோமம் செய்யவும், ஆலயத்தின் பூமிசுத்திக்காக நூறு நூறு திக்பாலமந்திர ஆவிர்த்தி ஹோமம் செய்ய வேண்டும்.
71. மஹா பாசுபதாஸ்திர மந்திரத்தினால் அங்கு ஆலயத்தை காப்பாற்றவேண்டும். முன்புள்ள அளவுபடியே வேறு ஆலயத்தை அங்கு நிர்மாணிக்க வேண்டும்.
72. ஸ்யம்புலிங்கம், தெய்வீகம், ஆர்ஷகம் இவைகளிலும் கணலிங்கம் உலோக லிங்கம் நதீப்ரவாகத்தினால் ஏற்பட்ட லிங்க விஷயத்திலும்
73. இவ்வாறாக கூறப்பட்ட லிங்கத்திலும் கும்பஸ்தாபனம் செய்யக்கூடாது. மானுஷ லிங்க விஷயத்தில் கும்பஸ்தாபனகார்யம் செய்யவேண்டும்.
74. ஏழுதினம் வரையிலும் பதினைந்து தினம், முப்பது நாட்கள் வரை கும்பத்தில் வைத்து பூஜிப்பது முறையாகும். அதற்குமேற்பட்ட தினங்களில் கும்பத்தில் ஆவாஹித்து பூஜித்த ஈசன் எல்லா குற்றத்தையும் உண்டாக்குபவன் ஆகிறான்.
75. ஆகையால் மிக முயற்சியுடன் ஓர் மாதம் முடிவதற்குள்ளோ அதற்கு முன்பாகவோ பாலலிங்கம் முதலிய மூர்த்திகளை ஸ்தாபித்து லிங்கமத்தியில் மந்திரத்தை பூஜிக்க வேண்டும்.
76. ஓர் மாதம் முதல் 12 வருஷம் வரையிலோ அதற்கு உட்பட்ட தினத்திலோ அந்த பாலாலய பிம்பத்திலிருந்து பரமேஸ்வரனை மூலலிங்கத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
77. முன்பு இருந்த லிங்கம் காலம் தேசம் இவைகளில் குறைப்பாட்டால் கிடைப்படவில்லை எனில் 36 வருஷத்திற்குள்ளாகவோ மூலலிங்கத்தில் பாலாலய மூர்த்தியை சேர்க்க வேண்டும்.
78. பாலலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி தின எண்ணிக்கையாகவும் பதினைந்து தினம் வரையிலாகவும் ஹோமம் செய்யவும் ஹோமத்தை இரண்டு மடங்கு மூன்று மடங்கு செய்து பாலாலயம் 24 வருஷத்திற்குள் செய்யப்பட்டால்
79. இரண்டு மடங்காக செய்யவும். 36 வருஷத்திற்கு மேற்பட்டு பாலாலய மூர்த்தத்தை மூல ஸ்தான மூர்த்தியில் சேர்க்கப்படாமல் இருந்தால் அந்த பாலாய மூர்த்தியானது மூலாலய மூர்த்தியாக ஆகிறது.
80. அங்குள்ள பாலலிங்காதிகளை எடுத்து மூலஸ்தானத்தில் பூஜிக்கவும். ஸகள பிம்பங்களுக்கும் இவ்வாறு கூறப்பட்டு அதன் விசேஷம் கூறப்படுகிறது.
81. 12 வருடத்திற்கு உள்ளாகவே, அவசியம் பாலாலய மூர்த்தத்தை மூலஸ்தானத்தில் சேர்த்து விடவேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடில் மூல பிம்பத்தை பாலாலய பிம்பத்திலேயே சேர்ப்பிக்க வேண்டும்.
82. ஆலயம், கோபுரம் இவைகளில் இவ்வாறான பிராயச்சித்த முறைகூறப்பட்டது. ஆனால் சுத்தமான கத்தியில் மந்திரங்களை பூஜித்து மற்ற கிரியைகளை செய்யவேண்டும்.
83. இவ்வாறாகவே பரிவார தேவதைகளுக்கும் கடத்தில் ஆவாஹித்து பூஜிக்கவும். சிவலிங்கம் முதலான எந்த வஸ்த்து உண்டோ அவை அறிவில்லாததினால் பிரதிஷ்டை செய்யப்பட்டாலும்
84. ஜோதிஷன், சில்பி, மற்ற சிவதீøக்ஷ இல்லாதவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டால் மறுபடியும் முன்பு கூறப்பட்டுள்ளபடி அந்தப்ரதிஷ்டா பிம்பத்திற்கு ஸம்ஸ்காரம் செய்ய வேண்டும்.
85. சைவசித்தாந்த மார்கத்திற்கு வேறான பாசுபதம் முதலிய கிரந்தங்களும் உள்ளன. அவைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை மறுபடியும் சைவாகம சம்ஸ்காரம் செய்துபிரதிஷ்டை செய்ய வேண்டும்.
86. முதலில் பாசுபதம் என்றும் பிறகு சோமசித்தம் என்றும் அதன்பிறகு லாகுலம் என்றும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாக கூறப்படுகிறது.
87. வாமம், தக்ஷிணம் சித்தாந்தம் என்ற பிரிவுகளால் ஒன்பது வகையாக கூறப்படுகிறது. சைவதந்ரமும், மந்திரம், தந்திரம் என்ற பிரிவுபடி நான்கு வகையாக கூறப்படுகிறது.
88. காரூடன், பைரவம், வாமம், பூததந்தரம், என்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முன்பு கூறப்பட்டுள்ள கிரந்தங்களும், ஒவ்வொன்றும் மூன்று விதமாக கூறப்பட்டுள்ளன.
89. மேலே கூறப்பட்ட தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை ஆதிசைவன் அர்ச்சிக்கவேண்டும். யாமளம் என்ற ஓர்தந்திரம் கூறப்படுகிறது. அதுவும் மிஸ்ரம் என கூறப்படுகிறது.
90. வாமம், தக்ஷிணம், சித்தாந்தம் என்று மூன்றுவிதமாக வாமம் பாரசைவம் சம்மந்தமாகவும், தக்ஷிணம் பைரவ தந்திர யோக்யமாகவும் கூறப்பட்டுள்ளன.
91. சைவ சித்தாந்தம், யாமள தந்திரம் இரண்டும் ஆதிசைவர்களுக்கு உரியதாகும். சைவசித்தாந்தத்திற்கு வேறுபட்டதான தந்திரங்கள் ரவுத்திரம் என கூறப்படுகிறது.
92. வாமம், தக்ஷிணம், மிஸ்ரம் என்ற பிரிவுகளாக பல வகைகளாக கூறப்பட்டுள்ள லவுகிகம், வைதிகம், அத்யாத்மம் அதிமார்க்கம், இவைகளும்,
93. அவ்வாறே பாசுபதம், சோமசித்தாந்தம், லாகுலம், காருடம், பைரவம் வாமம், பூததந்தரம், யாமளம் இவைகளும்
94. காபாலம், பாஞ்சராத்திரம், பவுத்தம், ஆர்கதமதம், ப்ருஹஸ்பதிமதம் சாங்கியம், யோகம், வைகாநசம், இவையும்,
95. வேதாந்தம், மீமாம்சம், புராணம், தர்மசாஸ்திரம், வாஸ்த்துசாஸ்திரம், ஸூத்திரம், ஷடங்கம், இதிகாசம் மற்றும்
96. அவ்வாறே நான்கு வேதங்களும் எவைகள் உண்டோ அவைகளில் சோதிக்கப்பட்டதை எல்லாவற்றையும் ரவுத்திரம் என கூறப்பட்டுள்ளது. சைவசித்தாந்தம் சவும்யம் என கூறப்பட்டுள்ளது.
97. ரவுத்திர தந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணு முதலான பிம்பங்கள் எவைகள் உண்டோ, அவைகள் எல்லாவற்றையும் சைவ முறைப்படி ஸ்தாபித்து பூஜிக்க வேண்டும்.
98. ஆதி சைவர்களால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்துவந்த லிங்கம் முதலான பிம்பங்களை மேற்கூறிய தந்திரங்களால் ரவுத்திர ரூபமாக பூஜிக்கப்பட்டால் அரசனையும் அரசாங்கத்தையும்
99. அந்தகிராமத்தையும், கிராமத்திலுள்ள ஜனங்களையும், மேற்கூறிய பூஜைகளால் கொல்லப்படுகிறார்கள். சந்தேகமில்லை. ஆதிசைவனால் முன்பு ஸ்தாபிக்கப்பட்ட ரவுத்திராதி தந்திர பிம்பத்தை பூஜிக்கப்பட்டாலும்
100. பிறகு ரவுத்திராதி தந்திரர்களால், பூஜிக்கப்பட்டாலும், அந்த பூஜை படைத்தலைவன் படையுடன் கூடி அமைச்சர், மந்திரி, பிராம்ணர்கள், க்ஷத்திரியர்கள் வைசியன், இவர்களும்
101. நான்காம், வர்ணத்தவர் அதற்கு கீழ்ப்பட்ட ஜனங்களையும் சீக்கிரம் அழிவடைய செய்கிறது. ஆகையினால் அரசன் மிக முயற்சியுடன் மேற்கூறிய குற்றமான பூஜைகளை நீக்கி, அவைகளை
102. முன்பு மேற்கூறிய ரவுத்ராதி தந்திரங்களிலே பூஜிக்கப்பட்டதை சைவ தந்திரத்தினால் சைவனால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டால் அரசனுக்கு வெற்றியும் ஆயுள் அபிவிர்த்தி இவைகளை எப்போதும் அடைவான்.
103. சைவ மந்திரங்களில் அமைதிதன்மை இருப்பதால் எல்லோருக்கும் மங்களத்தை கொடுக்கும் என்பதாகும் ஆபிசாரகலிங்கம் முதலியவைகளை ரவுத்திரர்களால் ஸ்தாபிக்கப்பட்டால்
104. அவைகளின் கர்ம மந்திரங்களை போக்கும் முறையை கூறுகிறேன் கேளும் பிராம்ணர்களே, மேற்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை அடைந்து, மண்பாண்டங்களை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.
105. கருங்கல்லால் ஆன திரவ்யங்கள், உலோகம், மரச்சாமான்களை, அடிக்கடி சுத்தி செய்து சுவர் முதலானவைகளை சுண்ணாம்பு சாந்தால் பூசி தரை பிரதேசங்களை சாணம் மெழுகிட வேண்டும்.
106. புண்யாகவாசனம், வாஸ்த்து சாந்தி செய்து பர்யக்னிகார்யம் செய்து மறுபடியும் புண்யாக வாசனம் செய்ய வேண்டும்.
107. அஸ்திர மந்திர ஜலத்தினால் பிரோக்ஷணம் செய்து பஞ்ச கவ்யத்தினால் சுத்தி செய்ய வேண்டும். உழுதல் முதலாக பிரதிஷ்டை வரையிலாக உள்ள கிரியையில் எந்த மந்திரங்கள் பிரவேசிக்கப்பட்டுள்ளதோ
108. அந்த மந்திரங்களை மஹாபாசுபத மந்திரத்தினால் விடுவிக்கவும், மஹாஜாலம் என்ற பிரயோகத்தினால் எல்லா மந்திரங்களையும் தன் வசப்படுத்தவும்
109. ஓம், ஹூம், ஹாம், ஹம், ஹாம், ஹூம், என்ற பீஜாக்ஷரத்துடன் மஹாஜால முத்திரையால், வசப்படுத்தவும் இங்குபிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் முதலிய மூர்த்தங்களை தர்பம், விபூதி, மண், தீர்த்தம் இவைகளால் சுத்தி செய்து
110. பூஜிக்கப்பட்ட மரப்பட்டை ஜலத்தினாலும், பசுவின் மூத்திரஜலத்தினாலும்
111. பஞ்ச கவ்யத்தினாலும் அபிஷேகம் செய்து சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்கவும், லிங்கத்தில் பூஜிக்கப்பட்ட மந்திரத்தை அறிந்தால் முன்புபோல் அதை ஸ்வீகரிக்கவும்
112. லிங்கத்தில் சேர்க்கப்பட்ட மந்திரம் அறியப்படாவிட்டால் ஓம்காரத்தை சேர்க்கவும். பிராணிகளின் ஜலங்களால் நனைக்கப்பட்டால் அஸ்திர மந்திரத்தை ஜபித்து சேர்க்க வேண்டும்.
113. அந்த லிங்கத்தை அடைந்த மந்திரங்களை தீபத்துடன் ஒருமைப்பட்டதாகச்செய்து, அந்த மந்திரங்களுடன் தீபத்தை சேர்ந்ததாக நினைத்து எடுக்க வேண்டும்.
114. முன்பு கூறப்பட்ட மந்திரத்தினால், ஸம் ஹார முத்திரையால் எடுத்து திரும்பவும் அந்த லிங்கத்தை முன்பு கூறப்பட்ட பொருள்களினால் அஸ்திர மந்திரம் கூறி சுத்தி செய்து
115. உழுவது முதல் பிரதிஷ்டை வரையிலான கார்யங்களை நினைத்த மாத்திரமாக செய்யவும். அந்தந்த மந்திரத்துடன் கூடியதாகவும், அந்தந்த ஹோமத்துடன் சேர்ந்ததாகவும்
116. சிவலிங்க பிரதிஷ்டையில் கூறியுள்ளபடி பிரதிஷ்டை செய்யவும். பிம்ப சுத்தி ஜலாதிவாசம் ஆகிய இரண்டும் செய்யவேண்டியதில்லை.
117. ஸயனாதிவாசமின்றி மற்ற கார்யங்களை செய்யவும் முன்பு சொன்ன பூஜா கார்யங்களை கருவறையிலோ அல்லது மண்டபத்திலோ செய்யவேண்டும்.
118. ஸ்வாமிக்கு முன்பாகவோ அல்லது மண்டபத்திலோ குண்டம் அல்லது ஸ்தண்டிலத்தில் ஹோமம் செய்யவும். ஸ்வயம்புலிங்கம், தேவர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம், பாண லிங்கம், ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட லிங்கம், கணங்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம்
119. ஆகியவைகள் சிறிது சேதமடைந்து வெடித்து இரண்டாக பிளந்து சேதம் ஏற்பட்டால் அந்த இடத்திலேயே சாந்தி செய்ய வேண்டும். திசா ஹோமமும் வேதபாராயணம் இவைகளும்
120. நூற்றெட்டுபடியால் அபிஷேகம் செய்து சாந்திஹோமம் செய்து ஸ்நபனமும் செய்யவேண்டும்.
121. பிராம்மணர்களை சாப்பிடச் செய்து, பிறகு சிவமதத்தைத் தழுவியவர்களையும் சாப்பிடச் செய்ய வேண்டும். ஈஸ்வரனுக்கு மஹாநிவேதனம் செய்து தாம்பூலத்தையும் கொடுக்க வேண்டும்.
122. நடுநிசியில் கிராமத்திலாவது, நகரத்திலாவது, பருப்பு, பொங்கல், பாயாசம் சக்கரைப் பொங்கல் இவைகளை வாழைப்பழத்துடன் சேர்த்து பலிதானம் செய்யவேண்டும்.
123. எல்லா தோஷமும் நீங்க இவ்விதம் ஏழுநாள் செய்ய வேண்டும். ஆசார்யரை தினந்தோறும் தங்கம், வஸ்த்ரம் முதலியவைகளால் பூஜிக்கவேண்டும்.
124. முடிவில் ஸ்நபனம் செய்யவேண்டும். மஹா ஹவிர் நிவேதனமும் கொடுக்க வேண்டும். எல்லா அவயங்களும் அழிந்திருந்தால் மறுபடியும் புதிதான பிம்பத்தை ஸ்தாபிக்க வேண்டும்.
125. ஸ்வாம்புவம் முதலிய லிங்கங்கள் பழுதடைந்தபொழுது எல்லா லக்ஷ்ணங்களோடு கூடிந்தாலும் அல்பதோஷமாக இருந்தால் சாந்திகர்மா சொல்லப்பட்டுள்ளது.
126. ஆலயத்தின் விஸ்தாரத்தில் ஆறு மாத்திராங்குலம் கூட குறைந்து இருப்பின் உயரத்தில் பன்னிரண்டு மாத்ரத்தினாலும் வரையிலும் இதில் ஒரு அங்குலம் கூட குறைவு இருப்பின் குற்றம்.
127. ஸ்தலத்தில் இரண்டு மாத்ராங்குலம் கம்பம் முதலிய அங்கங்களில் மாத்திராங்குலம் கிராம அமைப்பு, நகர அமைப்பு முதலியவைகள் தண்டம் வரையிலும் அளவு கூறப்பட்டுள்ளது.
128. சாலா ரூபமான ஆலயங்களிலோ லிங்கத்தின் அளவில் ஓர் முழம் அளவு வரையும் யவை அளவு முதல் மாத்திராங்குல அளவு வரையிலுமோ பூஜையில் பீடத்தை ஏற்படுத்தவேண்டும்.
129. வாயில்படி முதலிய அங்கங்களின் மாத்திராங்குல அளவிலும், பிரும்ம சூத்திரம் கோமுகம் நுனியும் மாத்திராங்குல அளவிலாகும். லிங்கத்திற்கு முன்பாக அந்த அளவும் முறையும் செய்யவும். இது பொருத்துக்கொள்ளக்கூடிய அளவாகும்.
இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் அனுகர்ம விதியாகிற முப்பத்திரண்டாவது படலமாகும்.