பதிவு செய்த நாள்
20
ஜூன்
2021
01:06
சென்னை :கோயில் சொத்துக்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.
அறநிலையத்துறை இணையதளத்தையும், முக்கிய கோயில்களின் இணையதளங்களையும் முறையாக பராமரிக்கவும், அனைத்து தகவல்களையும் இணையதளங்களில் வழங்கவும் கோரி, ஆலய வழிபடுவோர் சங்கத்தின் செயலர் ராதா ராஜன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில்களின் சொத்து விபரங்களை, அறிக்கையாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன், விசாரணைக்கு வந்தது.அறநிலையத்துறைகமிஷனர் குமரகுருபரன், தாக்கல் செய்த அறிக்கை:கோயில் சொத்துக்களை அடையாளம் காண அமைக்கப்பட்ட குழுவின் பணி நடந்து கொண்டிருக்கிறது. வைரஸ் தொற்று காரணமாக, இந்தப் பணி மெதுவாக நடக்கிறது. தொற்றுப் பணிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாலும் சர்வேயர் பற்றாக்குறையாலும், பணிகளை முடிப்பதற்கு நேரமாகிறது.எனவே, கோயில் சொத்துக்களை அளவிடவும், அடையாளம் காணவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்.
டிரோன் தொழில்: நுட்பத்தை பயன்படுத்தி, புவிசார் தகவல் அமைப்பை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளோம். ஓராண்டு, இரண்டாண்டுக்கு ஒரு முறை, தகவல்களை மேம்படுத்திக் கொள்ள முடியும்.நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், தவறுகள் குறைக்கப்படும்; துல்லியமான விபரங்கள் கிடைக்கும். பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.எனவே, இந்த தொழில்நுட்பத்தை கையாளுவதை ஏற்று, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையை பதிவு செய்து, விசாரணையை ஜூலை 21க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.