பதிவு செய்த நாள்
21
ஜூன்
2021
05:06
உத்திரமேரூர் : உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில், சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கும் நிலத்தின் எல்லையை குறிக்கும், 15ம் நுாற்றாண்டை சார்ந்த அரிய வகை சூலக்கல்லை, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர்,நேற்று கண்டெடுத்தனர்.
இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது: உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் - மருதம் சாலையில், 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட, இரு சூல கற்களை கண்டெடுத்தோம்.இதில், 50 செ.மீ., அகலம், 75 செ.மீ., உயரமும் உடைய ஒரு கல்லும், அதன் அருகில், 35 செ.மீ., அகலம், 70 செ.மீ., உயரமும் உடைய மற்றொரு கல்லும் உள்ளது. இந்த கல்லின் இடதுபக்கம் சூலச் சின்னமும், அதன்கீழ் பன்றி உருவமும் உள்ளது. விஜயநகர மன்னர்களின் காலத்தை சார்ந்தவை.மன்னர்கள் காலத்தில், சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலங்களுக்கு, அதன் எல்லையை குறிக்க, நான்கு திசைகளில் சூலச்சின்னம் பொறித்த கற்களை நட்டு வைப்பர். இதற்கு, சூலக்கற்கள் என, பெயர்.
இந்நிலங்களுக்கு வரியை நீக்கி, இறையிலி நிலங்களாக கோவிலுக்கு மன்னர்கள் வழங்கினர். இது, கோவில் நிதி வருவாய்க்கான ஏற்பாடாக இருந்தது. இதன் வருவாயில், அன்றாட பூஜைகள் உள்ளிட்ட கோவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இவ்வூரில், பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சிவாலயம் திருப்புலிவனமுடைய நாயனார் எனும் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்ளது. எனவே, இந்த கோவிலுக்கு கொடுத்த நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூல கற்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வூர் மக்கள் இதை, இன்றும், எல்லைக்கல் என்றே அழைக்கின்றனர்.தமிழகத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட சூலக்கற்களில், கழுதை மற்றும் நாயின் உருவம் இடம் பெற்றிருக்கவில்லை. ஆனால், இதில் இடம்பெற்றிருப்பது அரியதாக உள்ளது.கடந்த கால வரலாற்றை பறைசாற்றும் இவ்வகை அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.