பதிவு செய்த நாள்
22
ஜூன்
2021
02:06
காரைக்கால்: காரைக்கால் மாங்கனித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் காரைக்கால் அம்மையார் இவரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களின் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனி கோவில் உள்ளது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டு தோறும் மாங்கனி திருவிழா மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இந்தாண்டு நோய் தொற்று காரணமாக மாங்கனித்திருவிழா பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் எளிமையான முறையில் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி கோவில் நிர்வாகம் கடந்த 21ம்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் பரமதத்த செட்டியார் பட்டுவேட்டி,முத்து மாலைகளுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 22ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் காரைக்கால் அம்மையார் பரமதத்த செட்டியார் திருக்கல்யாணம் கைலாசநாதர் கோவில் வளாகத்தில் உள்ள மணிமண்டபத்தில் மணமகன் பரமதத்தர் பட்டாடை, நவமணி மகுடம், ஆபரணங்கள் அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின் புனிதவதியார் பட்டுபுடவை உடுத்தி மணமகள் கோலத்தில் எழுந்தளினார். பாரம்பரியபடி திருமண மேடையில் மாப்பிள்ளை வீட்டாருக்கும்,மணமகள் வீட்டார் கவுரவிக்கப்பட்டு தாம்பூலம் மாற்றிக் கொண்டனர். பின் யாகம் வளர்க்கப்பட்டு திருமண விழாவிற்கான சடங்குகள் நடந்தது.காலை 10.10மணிக்கு ஆலய குருக்கள் புனிதவதியாருக்கும் மாங்கல்யம் அணிவித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது. பின் மாலை ஸ்ரீபிக்ஷாடன மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் திருமணம் நிகழ்ச்சியில் பக்தர்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் மதியம் 12மணி முதல் 5மணி வரையிலும், 24ம் தேதி நடைபெறும் மாங்கனி இறைத்தல் மற்றும் அமுது படைத்தல் நிகழ்ச்சியில் மதியம் 12மணி முதல் 2மணி வரையும் உள்ளூர் பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களை கொரோனா பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர். வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,கள் நாஜிம்,நாகதியாகராஜன்,கலெக்டர் அர்ஜூன்சர்மா,துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ், மாவட்ட எஸ்.பி.,க்கள் வீரவல்லபன்,ரகுநாயகன் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம்,செயலாளர் பக்கிரிசாமி,பொருளாளர் ரஞ்சன் உள்ளிட்ட உபயதார்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் ஆகியோர் மட்டும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிகள் அனைத்தும் (www.karaikaltemples.com)என்ற யூடியூப் சேனல் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.மேலும் இன்று 23ம் தேதி மாலை ஸ்ரீ பிட்சாடணமூர்த்தி பஞ்சமூர்த்திகள் மகா அபிேஷகம்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி தேதி காலை 9.30மணிக்கு ஸ்ரீபிட்சாடணமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி உள் பிரகாரத்தில் மட்டும் அப்போது மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் அம்மையார் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படைத்தல்,இரவு 8மணிக்கு பரமதத்த செட்டியார் இரண்டாவது திருமணம் நடைபெறுகிறது. வரும் 25ம் தேதி அதிகாலை அம்மையாருக்கு பஞ்சமூர்த்திகள் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.