பதிவு செய்த நாள்
24
ஜூன்
2021
09:06
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், பெரிய நாயகி உடனுறை பெருவுடையார் திருக்கல்யாணம், பக்தர்கள் இன்றி நேற்று மாலை எளிமையாக நடந்தது.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவிலில், ஆண்டுதோறும் பெருவுடையாருக்கும், பெரியநாயகியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்டால், திருமண தோஷமுடையவர்கள் தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகவும் என்பது ஐதீகம். மேலும், பக்தர்கள் பழங்கள், குங்குமம், மஞ்சள் கிழங்கு, திருமாங்கல்ய சரடு, வெற்றிலை, சீவல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக, தற்போது கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்தநிலையில், பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் நேற்று மாலை திருக்கல்யாண வைபோகம், அனைத்து சம்பிரதாயங்களுடன் பக்தர்கள் இன்றி மிக எளிமையாக நடந்தது. இதில், சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.