பதிவு செய்த நாள்
24
ஜூன்
2021
10:06
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவில் எதிரில், பேவர்பிளாக் கல் பதிக்க சாலை தோண்டப்பட்டு, ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும், பணி முடியாததால், அந்த வழியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு முன்பாக பேவர்பிளாக் கல் பதிக்க தீர்மானிக்கப்பட்டு, கடந்தாண்டு பணி துவங்கியது. ஆறு மாதங்களுக்கு முன்பாக கல் பதிக்க, 1 அடிக்கும் மேல் வரை பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு, அங்கு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டது. பின், அந்த பணி கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பேவர்பிளாக் கல் அமைக்க, 1 அடிக்கு மேலாக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், தற்போது இங்கு இல்லை. அதை வேறு பணிக்கு பயன்படுத்தியதால், தோண்டப்பட்ட பள்ளத்தை மூட மண் இல்லை. ஜல்லி கற்களை கொட்டியாவது அமைத்து விட நினைத்தனர். மண் இல்லாமல் பணி முடிவது சாத்தியமில்லை என்பதால், பணி நடைபெறாமல் உள்ளது.சில நாட்களில், கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் எதிரில் தோண்டியுள்ள மெகா பள்ளத்தால் பாதிக்கப்படுவர். எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பேவர்பிளாக் கல் அமைத்து, சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வழி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பெட்ரீக் அருண்குமார் கூறியதாவது:நாங்கள், ஒன்றியம் முழுதும் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். கோவில் எதிரில் பேவர்பிளாக் கல் அமைக்க, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது.அந்த பகுதி தாழ்வாக உள்ளது. அதை சீர் செய்து, 15 நாட்களுக்குள்ளாக சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.