பழநி: பழநி முருகன் கோயிலின் உப கோவிலான திருஆவினன்குடியில் சுதை சிலை சேதம் அடைந்துள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முருகனின் மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி கோயிலில் சுதை சிலை சேதம் அடைந்துள்ளது. தற்போது கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறை படி கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை. பழநியில் உள்ள கோயில்களின் வாயிலில் நின்று பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
தற்போது திருஆவினன்குடி கோயிலின் வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரர் கோயில், அருகே தெற்கு திசையில் வாயில் உள்ளது. இந்த வாயிலின் முன் நின்று உற்சவர் சிலையை பக்தர்கள் தினசரி வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வாயிலின் மேல்புறம் விநாயகர் பார்வதி சிவன் முருகர் கைலாய மலையில் அமர்ந்திருப்பது போன்ற சுதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சில நாட்களுக்கு முன் கோயில் பணியாளர் அஜாக்கிரதையாக பணிபுரிந்ததால் முருகன் சிலையின் தலைப்பகுதி சேதமடைந்துள்ளது. முருகன் சுதைச் சிலை சேதம் அடைந்ததை கண்ட பக்தர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். கோயில் நிர்வாகம் விரைவில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. குறித்து விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், "கோயிலின் பணியாளர் அலட்சியமாக பணிபுரிந்ததால் முருகன் சுதை சிலை சேதம் அடைந்துள்ளது. கோயில் நிர்வாகம் விரைவில் இச்சிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றார்.