இப்பூவுலக உயிர்களுக்கு இறைவனால் கொடையாக படைக்கப்பட்டவையே தாவரங்கள். காரணம் நாம் வெளியிடும் கார்பன்டை ஆக்ஸைடை கூட உட்கொண்டு நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இதனால் தாவரங்கள் மனிதனுக்கு உயிர் மூச்சையே அளித்துக் காக்கின்றன. பல தாவரங்கள் மருத்துவ குணங்களையும் தெய்வ சக்தியையும் கூட கொண்டுள்ளன. அவ்வகையில் இறைவனால் மனிதனுக்கு அளிக்கப்பட்ட பெரும் அன்பளிப்புதான் சிவ சஞ்சீவி எனப்படும் ருத்ராட்சம். ஒருமுறை திரிபுராசுரன் என்னும் அசுரனால் தேவர்கள் துன்பப்பட்டனர். தேவர்களைக் காக்க, சிவபெருமான் கண்களை மூடாமல் ஆயிரம் ஆண்டுகள், தவம் செய்தார். அகோர அஸ்திரம் என்ற ஆயுதத்தைத் தயார் செய்ய கண்களை மூடும்போது, அவரது மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது. அது பூமியில் பட்டதும் ஒரு மரமாகத் தோன்றியது. அந்த மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் ருத்ராட்சம். ருத்ரனாகிய சிவனின் கண்களில் இருந்து உண்டானதால் இப்பெயர் பெற்றது. ருத்ராட்ச மரத்தின் விதைக்கு தனிச் சிறப்பு உண்டு. மற்ற விதைகளில் துவாரம் இருக்காது. துளசி அல்லது ஸ்படிக மணிகளை துளையிட்ட பிறகே கோர்க்க முடியும். ஆனால் இயற்கையிலேயே துளை உள்ளது ருத்ராட்சம். எல்லா மனிதர்களும் இதை எளிதாக அணிய வேண்டும் என்ற அடிப்படையில் இறைவனே இப்படிச் செய்திருக்கிறார் போலும்! வேறு எந்தத் தாவர விதைக்கும் இல்லாத சிறப்பு இது.