பதிவு செய்த நாள்
29
ஜூன்
2021
07:06
நைனிடால் : உத்தரகண்டில் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட கோவில்களுக்கு மூன்று மாவட்ட மக்கள் யாத்திரை மேற்கொள்வதற்கான அரசு அனுமதிக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது. உத்தரகண்டில் முதல்வர் தீரத்சிங் ராவத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இமயமலை பகுதியில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம்.கொரோனா காரணமாக தற்போது உத்தரகண்டின் சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தர்காசி மாவட்டங்களைச் சேர்ந்தோர் மட்டும் யாத்திரை மேற்கொள்ள, சமீபத்தில் அரசு அனுமதி அளித்தது.
இதற்கு எதிரான வழக்கை நேற்று விசாரித்த, உத்தரகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு, அரசின் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்தது.அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: யாத்திரைக்கான நடைமுறைகள் தொடர்பான அரசின் அறிக்கை நிராகரிக்கப்படுகிறது. கும்பமேளாவிலும் இதேபோல் அறிவிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமல், கொரோனா பரவல் அதிகரித்தது. கோவில் நிகழ்ச்சிகளை டிவியில் நேரலையாக நாடு முழுதும் ஒளிபரப்புங்கள் என, நாங்கள் கூறுவது ஆன்மிக மரபுக்கு எதிரானது என்கிறீர்கள். ஆனால் சாஸ்திரங்கள் எழுதப்பட்டபோது, டிவி போன்ற சாதனங்கள் இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.கொரோனா வைரசில் இருந்து மக்களை காப்பாற்றுவது மட்டுமே அவசியம் என்பதால், புனித பயணம் மேற்கொள்வதற்கான அரசின் உத்தரவிற்கு தடை விதிககப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.