பதிவு செய்த நாள்
29
ஜூன்
2021
06:06
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் 70 நாட்களுக்கு பின், நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கோட்டாட்சியர் மலைக்கோவிலில் நேரில் வந்து ஆய்வு செய்தார்.
கொரோனா தொற்று பரவலால், கடந்த ஏப்ரல் மாதம் 3வது வாரம் முதல், திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில், தினமும் நித்ய பூஜைகள் மட்டும் நடந்து வந்தன.தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால், கோவில்கள் திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம் என, அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, நேற்று காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.முக கவசத்துடன் வந்த பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கி, வெப்பம் பரிசோதனை செய்த பின், தரிசனத்திற்கு அனுமதித்தனர்.அப்போது பக்தர்கள் சமூக விலகலுடன் நின்று தரிசனம் செய்வதற்கு வசதியாக வட்டம் போடப்பட்டு, அதில் பக்தர்கள் நின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா, வருவாய் ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் திடீரென மலைக் கோவிலுக்கு வந்து, பக்தர்கள் அரசு நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்கிறார்களா என ஆய்வு செய்தனர்.நேற்று காலையில் மழை பெய்ததாலும், முதல் நாள் என்பதாலும், பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.திருவள்ளூர்திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்து வந்த பக்தர்களுக்கு கோவில் ஊழியர்கள் சானிடைசர் வழங்கி, வெப்ப பரிசோதனை செய்த பின், சமூக விலகலுடன் நின்று மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதே போல், தீர்த்தீஸ்வரர் கோவில், பஞ்சமுக ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு கோவில்களிலும், அரசு அறிவித்த நடத்தை விதிமுறைகள் பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.உத்திரமேரூர்உத்திரமேரூர் வட்டாரத்தில், கல்வெட்டு கோவில் எனப்படும் வைகுண்ட பெருமாள் கோவில், சுந்தரவரதராஜ பெருமாள் கோவில் உட்பட, பல கோவில்கள் திறக்கப்பட்டன.
பக்தர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், வாலாஜாபாத் ஒன்றியம், கோவிந்தவாடி குரு கோவில் என, அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவிலில், பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், கோவில் வெறிச்சோடியது.