பதிவு செய்த நாள்
30
ஜூன்
2021
09:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் பல்வேறு இடங்களில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கல் மண்டபங்கள் சிதைந்தும், புதர் மண்டியும் விழுந்துவிடும் சூழலிலும் காணப்படுகிறது இதனை பாதுகாப்பதில் அரசுத்துறை அதிகாரிகள் பாராமுகம் காட்டுகின்றனர்.
மன்னர்கள் காலத்தில் இங்குள்ள மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய நடந்து வரும் வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கும், இக்கோயில்களில் பூஜை நேரத்தில் மணி அடித்த உடன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒன்று என கட்டப்பட்டுள்ள கல் மண்டபங்ளில் மணியடித்து மன்னர்கள் கேட்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பெருமைக்குரியவை. இத்தகைய கல் மண்டபங்கள் இன்று அரசு துறையின் பாராமுகத்தால் சிதைந்து வருகிறது. பட்டத்தரசி அம்மன் கோவில், பூவாணி விலக்கு அருகேயுள்ள மண்டபங்களில் புதர்மண்டி கிடக்கிறது. மேற்கூரைகள் இடிந்து எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் காணப்படுகிறது. ஒரு சில மண்டபங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் குடிமகன்களின் மதுக்கூடமாக உள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்: மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கல் மண்டபங்களை தற்போது எந்த அரசுத் துறையும் கண்டுகொள்வதில்லை. இதனால் தனிநபர்கள், குடிமகன்கள், சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து தங்குமிடமாக மாற்றி வருகின்றனர். இவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சரவணதுரை, பாரதிய ஜனதா நிர்வாகி.
காப்பாற்ற வேண்டும்: இங்குள்ள கல் மண்டபங்கள் மிகவும் புராதன மிக்கவை. கலைநயம் கொண்டவை. இதனைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே, அரசு நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சிதைந்து வரும் கல் மண்டபங்களை சீரமைத்து காப்பாற்ற வேண்டும். - சமுத்திரம், ஒருங்கிணைப்பாளர், ஈஷா யோகா.
கட்ட முடியாது: அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்தில் கட்டப்பட்ட இது போன்ற கல் மண்டபங்களை இன்றைய காலத்தில் கட்ட முடியாது. பல வருடங்களாக சிதைந்து வரும் கல் மண்டபங்களை அரசு நிர்வாகம் பாதுகாக்க வேண்டும். - சரவணன், சதுரகிரி பக்தர்.