பதிவு செய்த நாள்
02
ஜூலை
2021
12:07
திண்டுக்கல் : சிறுமலையில் மறைந்து வரும் பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளூர் மக்களிடமும், சுற்றுலா பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக இயற்கை எழில் கொஞ்சும் மலைவாச தலம் சிறுமலை. திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ.,ல் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து 1,600 மீ., உயரம் சென்றால் சிறுமலையை அடையலாம்.ராமாயண கால அனுமன் மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலையை துாக்கி சென்ற போது, அதில் இருந்து விழுந்த சிறு துண்டுதான் சிறுமலை என கூறப்படுகிறது. இங்கு பழையூர், புதுார், அகஸ்தியர்புரம், பொன்னுருக்கி, தாளக்கடை, நொண்டி பள்ளம், தென்மலை உட்பட 10 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.குளுமைக்கு பஞ்சமில்லைமூலிகைகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளுடன் ரம்யமாக காட்சியளிக்கும் சிறுமலை, தற்போது காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒருபோதும் குளுமைக்கு பஞ்சம் இருக்காது. இதனால் சிறுமலையை ஒரு நாள் சுற்றுலா தலமாக்கும் திட்டம் சுற்றுலாத்துறை வசம் உள்ளது. அதே சமயம் சுற்றுலா பயணிகளை கவர, ரூ.5 கோடியில் வனத்துறை சார்பில் தென்மலையில் தங்கும் வசதி, உணவகம், பொழுது போக்கு உட்பட பல வசதிகளுடன் பல்லுயிர் பூங்காவுக்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இது தவிர அகஸ்தியர்புரத்தில் வெள்ளிமலை சிவன் கோயில், அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி தோறும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.மறைந்து வரும் ஓவியங்கள்தமிழர்களின் தொன்மை வரலாறை வெளிப்படுத்துவதில் அகழாய்வுகள், கல்வெட்டுகள் போல பாறை, குகை ஓவியங்களும் குறிப்பிடத்தக்கவை. சிறுமலை தென்மலை மீன் குட்டி பாறை, கருப்பு கோயில் பகுதியில் வெண்மை நிற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை பல நுாற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வேட்டையாடுதல், நடனம், திருவிழா போன்றவற்றை சித்தரிப்பதாக உள்ளது.இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பது நிச்சயம். சுற்றுலா மற்றும் தொல்லியல் துறையினர் அதை கண்டும் காணாமல் இருப்பதால் முட்புதர்கள், செடி கொடிகளால் மூடப்பட்டுள்ளன. காலப்போக்கில் பாறை ஓவியங்கள் மறைந்தும் வருகின்றன. சுற்றுலா பயணிகள் அதனை சுலபமாக சென்று பார்க்கவும் வசதி இல்லை. ஓவியங்களை பாதுகாப்பதுடன், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாழ்க்கை கிடைக்கும்: விவசாயத்தால் போதிய வருமானம் இல்லை. இங்கு சுற்றுலாவை மேம்படுத்தினால் அதை நம்பி பலருக்கும் வேலை, இன்னொரு வாழ்க்கை கிடைக்கும். பல்லுாயிர் பூங்காவுக்கான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பயணிகளை கவர குதிரை சவாரி, பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்.- செல்லப்பன், பொன்னுருக்கி.
ஓவியங்களை பாதுகாக்கணும்: முன்னோர்களின் வாழ்க்கை குறிப்புகளை உணர்த்தும் ஓவியங்களை பாதுகாக்க வேண்டும். சுற்றுலாத் துறை பட்டியலில் சிறுமலை இருந்தாலும் இங்கு வருபவர்கள் சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகள், பொழுது போக்குகள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. எனவே, இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழிலை ரசித்து செல்ல தேவையான வசதிகளை உருவாக்க வேண்டும்.- தியாகராஜன், சிறுமலை.