பதிவு செய்த நாள்
03
ஜூலை
2021
03:07
திருத்தணி: தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 79.9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், திருத்தணி கோவிலில் நிலுவையில் உள்ள பணிகள், ஓராண்டுக்குள் முடிக்கப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவில் தலைமை அலுவலகம், மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கை மலைக்கோவிலில், ஒன்பது நிலை ராஜகோபுரம், கல்கார தீர்த்தம், தங்க விமானம், கோவிலின் இரண்டாவது மலைப்பாதை மற்றும் கோவில் குளங்களை, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின் அமைச்சர் கூறியதாவது:தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான, 79.9 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம், அறநிலைய துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 500 கோடி ரூபாய்.திருத்தணி முருகன் கோவிலில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கடந்த காலங்களில் விரைவுபடுத்தப்படாமல் நிலுவையில் இருந்தன. இதை அறிந்த முதல்வர் ஸ்டாலின், அறநிலைய துறை வாயிலாக, ஆய்வு கூட்டம் நடத்தினார். இதன் தொடர்ச்சியாகஅறநிலைய துறை ஆணையர், திருவள்ளூர் கலெக்டர், திருத்தணி எம்.எல்.ஏ., ஆகியோருடன் மேற்கண்ட பகுதிகளில் ஆய்வு செய்தேன். ஆய்வில், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
குளங்கள் சீரமைப்பு: ராஜகோபுரத்தின் இணைப்பு படிகள் அமைப்பதற்கு, தொல்லியல் துறை அனுமதி பெற்று, விரைவில் துவங்கப்படும். ஒன்பது ஆண்டுகளாக துார் வாரப்படாமல் உள்ள சரவணப்பொய்கை குளம், விரைவில் துார் வாரப்படும்.பக்தர்கள் தங்கும் விடுதிகள் நவீனப்படுத்தப்படும். மலைப்படியில் சிதிலமடைந்த மண்டபம் அகற்றி, புதிய மண்டபம் கட்டப்படும். அதேபோல, மலைக்கோவிலில்உள்ள குளங்கள் சீரமைக்கப்படும்.ரோப் கார்எட்டு ஆண்டுகளாக வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதுபார்ப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. விரைவில், தேர்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு விடப்படும். முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் படிகள் அதிகம் என்பதாலும், முதியோர்கள் தரிசனம் செய்வதற்கு, ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். இத்திட்டம், முதல்வர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார். ரோப் கார் அமைக்கவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கு உண்டான இடங்கள் ஆய்வு செய்தேன்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது, அறநிலைய துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளுர் கலெக்டர் அல்பி ஜான் வர்கிஸ், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரமணி, தாசில்தார் ஜெயராணி பங்கேற்றனர்.