அதியமான்கோட்டை காலபைரவருக்கு சிறப்பு பூஜை
பதிவு செய்த நாள்
03
ஜூலை 2021 02:07
அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், பைரவருக்கு பூஜைகள் நடந்தன. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தர்மபுரி மாவட்டத்திலுள்ள கோவில்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, ஆனி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், காலை, 6:00 மணிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஊரடங்கால் கோவில் பூட்டப்பட்டது. இதனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும், காலபைரவரை வழிபட வந்த, உள்ளூர் வாசிகள் சிலர், பூட்டியிருந்த கோவில் கதவின் முன் நின்று, சுவாமியை வழிபட்டுச்சென்றனர். இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் அனுமதியின்றி, பூஜை மற்றும் அலங்காரம் மட்டும் செய்யப்பட்டது.
|