நண்பர்கள், உறவினருடைய வீட்டிற்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி சென்று பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்படும். ஒரு நண்பரின் வீட்டிற்கு வந்த தம்பதியர், ‘நாங்களும் உங்களின் ஊருக்கே வந்து விட்டோம். எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் வில்லங்கம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் வாடகை வீட்டுக்காக அலைந்த பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது’ என மாறி மாறி இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பிட்ட நேரம் சுவாரஸ்யமாகக் கேட்டார் நண்பர். அவர்களின் அறுவைக் கச்சேரி தொடரவே நண்பரின் மனம் சலித்தார். ஒரு கட்டத்தில் வெறுப்புடன், ‘சரி...நான் வெளியே கிளம்ப வேண்டி இருக்குது. நீங்கள் கிளம்புகிறீர்களா.. மீண்டும் ஒருநாள் பேசுவோம்’’ என்றார் வேகமாக. தம்பதியருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அடுத்தவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதும், அதிக நேரம் பேசுவதும் கூடாது என்பதை உணர்ந்தனர். ‘உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே’ என்கிறது பைபிள்.