ஒருமுறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தின் சார்பில் கலைகள் தொடர்பான கூட்டத்திற்கு ஏற்பாடாகி இருந்தது. மகாபெரியவரின் முன்னிலையில் கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பு அது. மகாபெரியவரின் பக்தரான வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் அவர்களில் ஒருவர். நாயன்மார்களில் ஒருவரான அப்பர் சுவாமிகளின் வரலாற்றை வில்லுப்பாட்டில் இசைக்கும்படி மகாபெரியவர் அவரிடம் தெரிவித்தார். எந்த விஷயத்தைப் பற்றி கேட்டாலும் உடனடியாக பாடல் பாடும் ஆற்றல் கொண்டவர் சுப்புஆறுமுகம். அன்றிரவே அப்பர் சுவாமிகளின் வரலாற்றை வில்லுப்பாட்டிற்கு ஏற்ப தயாரித்து ஒத்திகை பார்த்தார். மறுநாள் காலையில் மகாபெரியவரின் முன்னிலையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி தொடங்கிது. பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்க வந்தனர். சுப்பு ஆறுமுகம் பாடிய ஒரு பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
‘உலகைக் காக்கும் தாயே! உன்னிடம் இல்லாத ஒன்று என்னிடம் உள்ளதம்மா! அதுதான் கவலை. உனக்குக் கவலையே கிடையாது. என் மனதில் கவலை நிறைந்திருக்கிறது. என் கவலையை எல்லாம் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் அம்மா. உன் கால் கட்டை விரலால் கவலை என்பதில் உள்ள ‘வ’ என்ற நடு எழுத்தை அழித்துவிடு. மீதியுள்ள இரண்டு எழுத்தான கலையை வளர்க்க உன் ஆசியைத் தா! வில்லுப் பாட்டில் தேர்ச்சி பெற அருள்புரிவாய்!’ இதுதான் பாடலின் பொருள்.
அப்பர் சுவாமிகளின் வரலாற்றை கேட்ட மகாபெரியவர் மகிழ்ந்தார். சுப்பு ஆறுமுகத்திற்குப் பொன்னாடை அளித்து கவுரவித்தார். ‘‘அம்பிகை ‘வ’ வை அழித்து விட்டாள். இனி கலை மட்டும்தான் உன்னிடம் உண்டு. கவலை கிடையாது! சந்தோஷமாக இரு’’ என ஆசி வழங்கினார்.
‘உன் வில்லுப் பாட்டை ஏன் ரசிக்கிறேன் தெரியுமா? உன்னிடம் வில்லும் இருக்கிறது. உடுக்கையும் இருக்கிறது. வில்லைப் பார்த்தால் தெற்கே ராமேஸ்வரத்தில் கோயில் கொண்ட ராமர் நினைவுக்கு வருகிறார். உடுக்கை சப்தத்தைக் கேட்டால் வடக்கே காசியில் கோயில் கொண்ட சிவபெருமான் நினைவுக்கு வருகிறார். சிவனையும் விஷ்ணுவையும் ஒரு நேரத்தில் ஞாபகப்படுத்துவது வில்லுப் பாட்டு. வடக்கு, தெற்கை இணைத்து நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் தேவை என்பதை வலியுறுத்தும் கலையும் கூட.’ என்றார் மகாபெரியவர். புதிய கண்ணோட்டத்துடன் மகாபெரியவர் அளித்த விளக்கத்தைக் கேட்ட சுப்பு ஆறுமுகம் உட்பட அனைவரும் ஆரவாரித்தனர்.