மழை தெய்வமான மாரியம்மனுக்கு ஆடிசெவ்வாய், வெள்ளியன்று கஞ்சி, கூழ் படைத்து வழிபாடு செய்வர். ஆடிக்கூழ் வார்த்தால் அம்மன் அருளால் நாடு செழிக்க மழை பெய்யும் என்பது ஐதீகம். விரதமிருந்து பெண்கள் வேப்பிலை சேலை உடுத்திக் கொண்டு கோயிலை வலம் வந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அம்மனுக்கும், வாகனமான சிம்மத்திற்கும் மஞ்சப்பால் அபிஷேகம் செய்வர். மஞ்சள் கலந்த தண்ணீருக்கு மஞ்சப்பால் என்பது பெயர். கன்னிப்பெண்கள் மஞ்சப்பால் அபிஷேகம் செய்ய அம்மன் மனம் குளிர்ந்து விரைவில் திருமண யோகம் அருள்வாள் என்பது ஐதீகம்.