ரிஷிவந்தியம் : கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, பக்தர்கள் சமூக இடைவெளிவிட்டு நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. காலை, மாலை வேளைகளில் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி வழக்கம்போல் நடந்தன .தற்போது தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் பக்தர்களின் தரிசனத்திற்கு கோவில்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் திருவரங்கம் அரங்கநாதபெருமாள் கோவில்கள் சுத்தம் செய்யும் பணி நடந்தது. கோவில் பணியாளர்கள் வளாகத்தைச் சுற்றி கிருமிநாசினி தெளித்தனர். தொடர்ந்து கோவில் மேற்புறத்தில் இருக்கும் ஒட்டடைகளை சுத்தம் செய்து, தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தனர். கொரோனா பரவல் இருப்பதால் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியினை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதேபோன்று விழுப்புரத்தில், வைகுண்டவாச பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில் உட்பட பிரசித்தி பெற்ற கோவில்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.