பதிவு செய்த நாள்
05
ஜூலை
2021
04:07
கோவை: கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள் அனைத்தையும், துாய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க, அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து துாய்மைப்பணிகள் துவங்கின.கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் சார்பில், அனைத்து பட்டியல் சார்ந்த மற்றும் சாராத கோவில்களுக்கும், ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:அரசிடமிருந்து எந்த நேரமும், கோவில்நடை திறப்பது குறித்த அறிவிப்புகள் வரலாம். அதனால் கோவில் செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்களை கொண்டு, கோவிலின் உட்புறத்தை துாய்மைப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.கோவில் குடிநீர் தொட்டி, பக்தர்கள் அமரும் பகுதி ஆகியவற்றை துாய்மைப்படுத்தி குடிநீர் நிரப்பவும், பக்தர்கள் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடி கம்பிகளுக்கு, கிருமி நாசினி தெளித்து துாய்மைப்படுத்தி வைக்க வேண்டும். போதுமான கிருமிநாசினி திரவத்தை இருப்பு வைக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் கோவை- அவிநாசி சாலையிலுள்ள தண்டுமாரியம்மன் கோவிலின் கருவறையின் வெளிப்பகுதியில், தண்ணீர் பீய்ச்சி அடித்து துாய்மைப்படுத்தும் பணிகளை, கோவில் பணியாளர்கள் மேற்கொண்டனர்.