கீழக்கரை : ஏர்வாடி செய்யது சுல்தான் இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடக்கும்.
கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சந்தனக்கூடு விழா பக்தர்கள் அனுமதி இன்றி நடந்தது. ஜூன் 12 மாலை மவுலிது ஓதப்பட்டு விழா துவங்கியது. ஜூன் 23 அன்று தர்கா முன்புறமுள்ள மனராவில் கொடியேற்றம் நடந்தது. நேற்று மாலை 6:00 முதல் இரவு 10:30 மணி வரை உலக நன்மைக்கான மவுலிது (புகழ்மாலை) ஓதப்பட்டது. இரவு 10:00 மணி அளவில் தர்காவில் உள்ள புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு, பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகைச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 10:30 மணிக்கு மேல் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு சாவி ஏர்வாடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். யாத்திரீகர்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.