பதிவு செய்த நாள்
06
ஜூலை
2021
11:07
தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர், என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.
ஆகம விதி: அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர். அதாவது, தன்னை, தான் சார்ந்துள்ள இடத்தை, தான் தொடும் பொருட்களை, தான் ஓதும் மந்திரத்தில் சுத்தத்தை பின்பற்றிய பின், தெய்வ விக்கிரகங்களை சுத்தப்படுத்த வேண்டும் என்பதே, அந்த விதி. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.
பொதுவாக, தன்னை, தான் சார்ந்த இடத்தை, தான் புழங்கும் பொருட்களை, கர்ப்பகிரகத்தை என, அனைத்தையும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்படும் நிலையில், அதை கடைப்பிடிக்க முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர். அவர்களின் உடல், மனக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத வகையில், அவர்களுக்கு மாத விலக்கு என்பது உள்ளது. பொதுவாக, பெண்கள், மாதவிலக்கான நேரங்களில், பூஜைகளில் பங்கேற்பதோ, பூஜை பொருட்களை தொடுவதோ கிடையாது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க இலக்கியமான புறநானுாற்றின் 299வது பாடலில், முருக வழிபாடு பற்றி கூறும்போது, கலம் தொடா மகளிர் என்ற வரி வருகிறது.
அதாவது, பெண்களின் மாத விலக்கான காலத்தில், பூஜையிலிருந்து விலகி இருப்பதை, அது விளக்குகிறது.பொதுவாக, அர்ச்சகர் வீட்டில் இறப்பு நிகழ்ச்சி நடந்தால், அவர், 10 முதல் 15 நாட்களுக்கு கோவிலுக்குள் வரமாட்டார். பின், தன்னையும், வீட்டையும் சுத்தப்படுத்திய பின் தான், கோவில் பூஜைகளில் பங்கேற்பார்.இந்நிலையில், பெண் அர்ச்சகர் ஒருவர், கோவில் பூஜையில் இருக்கும் போது மாத விலக்கானால், அந்த பூஜை, கருவறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.
இதுபோன்ற நிகழ்வுகள், பக்தர்களின் மனநிலையையும், பெண் அர்ச்சகரின் மனநிலையையும் பெரிதும் பாதிக்கும்.நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், அந்தந்த கோவில்களுக்கு உரிய தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர பூஜைகள், திருவிழாக்கள் சார்ந்த விஷயங்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன.அவை தான், அந்தந்த கோவில்களின் சட்ட ஆவணங்கள். அவற்றை, ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டும்.சிவாலயங்கள் குறித்த நெறிமுறைகளை, சைவ இலக்கியங்களும், விஷ்ணு ஆலயங்கள் குறித்த நெறிமுறைகளை வைணவ இலக்கியங்களும், பட்டயங்களும், கோவில் கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன.
வழிபாட்டு முறை: சோழர் காலத்தில், குலோத்துங்க சோழன், ஒரு கோவிலில் அர்ச்சகரை நியமிக்கிறான். அதை ஆச்சார்யார்கள் எதிர்த்ததும், அதை மன்னன் ரத்து செய்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதாவது, அர்ச்சகர் நியமனம், பூஜை முறைகளில் அரசன் தலையிட முடியாது என்பதை, வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தன் நுாலில் பதிவு செய்துள்ளார்.பக்தி, ஆன்மிகம் என்பவை, நம்பிக்கை சார்ந்தவை. சமூக சமத்துவம் என்ற பெயரில், பெண்களை அர்ச்சகராக்குவது, கோவில்களில் காலம் காலமாக பின்பற்றப்படும் வழிபாட்டு முறைகளை சிதைப்பது உள்ளிட்ட செயல்களை அரசு செய்தால், பக்தியின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விடும். அரசு, அர்ச்சகரை ஓர் அரசு ஊழியர் போல பாவித்து ஊதியம் நிர்ணயிப்பது, அவருக்கு 65 வயதில் ஓய்வளிப்பது உள்ளிட்ட செயல்கள் உகந்தவையல்ல.
பூஜையில் ஈடுபடுவோர் 65 வயதுக்கு மேல் தான், மந்திரங்களிலும், பூஜை முறையிலும் ஆழமாக வேறுான்றுவர். அவர்களின் அனுபவங்களை முடக்குவதால், பூஜைகளும், திருவிழாக்களும் பாதிக்கப்படும்.முன்பெல்லாம், கோவில் சார்ந்த முடிவுகளை, ஓர் அரசாங்க அதிகாரியால் எடுக்க முடியாது. அதற்கான முடிவுகளை எடுக்க, குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவில், அர்ச்சகர், வாத்தியம் இசைப்பவர், கோவில் நிலம் பராமரிப்பவர், கோவில் சொத்துக்களை பராமரிப்பவர், ஊர் பஞ்சாயத்தார், நாட்டு பெரியவர், துறவி என, ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் இடம் பெறுவர். இந்த குழு உறுப்பினர்கள், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போதும், அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் - நமது நிருபர் -