பதிவு செய்த நாள்
07
ஜூலை
2021
06:07
தஞ்சாவூர், கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, 82 நாட்கள் கழித்து தஞ்சாவூர் பெரியகோவிலில், நடந்த பிரதோஷத்தில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்.16ம் தேதி முதல் தஞ்சாவூர் பெரியகோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலுக்குள் வழக்கம் போல தினம்தோறும் நான்கு கால பூஜைகள்,விழாக்கள், பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பொது முடக்கத்தில் தளர்வுகளை அளித்ததால், கடந்த 5ம் தேதி முதல் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிப்பட்டனர். மேலும், கோவிலுக்குள்ளாக பக்தர்கள் வந்து செல்ல வசதியாக இரண்டு வழிகள் உருவாக்கப்பட்டு, சமூக இடைவெளியுடனும், நுழைவு வாயிலில் சானிடைசர் தெளித்து, தெர்மல் மீட்டர் கொண்டு சோதனை செய்த பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் 82 நாட்கள் பிறகு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்று நந்தியம் பெருமானை வணங்கினர். இதுவரை பக்தர்கள் இன்றி 5 பிரதோஷம் நடந்தது குறிப்பிடத்தக்கது.