பதிவு செய்த நாள்
08
ஜூலை
2021
09:07
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் காலமான தட்சணாயன புண்ணிய காலத்தில், ஆனி பிரமோற்சவ விழா நேற்று, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகள், மற்றும் அருணாச்சலேஸ்வரர், உண்ணாமலையம்மன், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, விநாயகர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் மற்றும் பராசக்தி அம்மன், தங்கக்கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில், காலை, 6:00 மணிக்கு, மிதுன லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என, பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வழிபட்டனர். விழாவில் தொடர்ந்து, 10 நாட்களுக்கு, தினமும் சுவாமி, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை, ஐந்தாம் பிரகாரத்தில், சுவாமி அம்மன் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். விழா நிறைவு நாளன்று அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்கும்.இது குறித்து, ரமேஷ் சிவாச்சாரியார் கூறியதாவது:கோவிலில், ஆண்டுக்கு நான்கு கொடியேற்றம் நடக்கிறது. இதில், தட்சணாயன காலம், உத்தராயண காலம், கார்த்திகை தீப திருவிழா ஆகியற்றில், சுவாமி சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்திலும், ஆடிப்பூர பிரம்மோற்சவத்துக்கு அம்மன் சன்னதியில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடக்கும். கடந்த, 2001க்கு பிறகு, இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவமும், ஆனி திருமஞ்சனமும் ஒன்றாக வருவது விசேஷமானது.இவ்வாறு அவர் கூறினார்.
பிரதோஷம்: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு, சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.